வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா? மக்களவையில் கனிமொழி ஆவேசம்!

 09 09 2023

கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? என மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களவையில் கனிமொழி  கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்பி கனிமொழி பேசசியதாவது:

மணிப்பூரில் நூற்றுக்கணகான நிவாரண முகாம்கள் உள்ளன. ஆனால் அங்கு உணவில்லை, நீரில்லை ஆனால் அளவுக்கு அதிகமான மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உள்பட அனைவரும் பசியுடனும் பயத்துடனும் உள்ளனர்.

முகாமில் தங்கியுள்ள தாய் ஒருவர், தன் மகன் இறந்துவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் அவனின் உடல் எங்கும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கதறுகிறார். இது ஒரு தாயின் கதறல் மட்டும் இல்லை. இதே போன்று பல தந்தைகள், சகோதரர்கள் என பல தரப்பினர் கதறிக்கொண்டிருக்கின்றனர்.

மைதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், நீங்களெல்லாம் வந்து எங்களை பார்க்கிறீர்கள் ஆனால் பிரதமரோ, முதலமைச்சரோ ஏன் எங்களை வந்து பார்க்கவில்லை என கேள்வி எழுப்பினார். எங்கள் வீடுகளும், குடும்பமும் மொத்தமாக நிர்மூலமாகியுள்ளன. ஆனால் யாரும் வந்து எங்கள் நிலையை சரி செய்யாதது ஏன் என வினவினார்.

மணிப்பூரில் அனைத்து இன மக்களும் பாகுபாடின்றி இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நான் பிரதமர் மோடியையும், இந்த அரசையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்து இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுங்கள்.

மணிப்பூர் நிவாரண முகாம்கள் சுகாதாரமற்றதாக வாழத் தகுதியற்ற வகையில் உள்ளது. மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.

“உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? டபுள் எஞ்சின் அரசால் மணிப்பூர் இரட்டிப்பு பேரழிவுக்கு ஆழாகியுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான போலீசாரும், சிறப்பு படைகளும் இருந்த போதும் மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க மணிப்பூர் அரசு தவறிவிட்டது. மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட விவகாரத்தில், கலவரக்காரர்களிடம் அப்பெண்களை ஒப்படைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மகாபாரத திரௌபதி குறித்து பலர் இந்த நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். மணிப்பூரில் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண்களும் கடவுளையும், ஆளும் அரசையும் வேண்டியிருப்பார்கள் அல்லவா? ஆனால் கடவுளும் உதவவில்லை, இந்த அரசும் உதவவில்லை. பெண்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியான பின்னர் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளனர். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு சரியாக தெரியவில்லை. கண்ணகியின் கோபத்தால் பாண்டிய மன்னன் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா? இந்தியை திணிப்பதை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் உள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அடையாளம் காணப்படாத உடல்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் ரயில்வே துறை அதிகாரிகள் முன்கூட்டியே அறிவுறுத்தியும் அரசு கண்டுக்கொள்ளாததே பெரும் விபத்துக்கு காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. பணியிடங்களை பெரும் அளவு நிரப்பாமல் இருப்பதும் இதுமாதிரியான விபத்துக்குகளுக்கு முக்கிய காரணமாகும். இதற்கெல்லாம் யார் பொறுப்பு. இதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளன. 50 சதவீத மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுதான் உங்கள் பாரதமா?

மாற்றுத்திறனாளிகளுக்க மத்திய அரசு கொடுக்கும் தொகையும் ஒரு கிலோ தக்காளியின் விலையும் ஒன்றாக உள்ளது. பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் இந்தியா விரைவில் உங்களுக்கு பாடம் புகட்டும்.

இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

\source https://news7tamil.live/do-you-know-the-story-of-pandiyans-scepter-breaking-due-to-kannagis-anger-kanimozhi-passionate-speech-in-lok-sabha.html