வெள்ளி, 23 செப்டம்பர், 2016

முஸ்லிம் மதத்தை காரணமாக கூறி அகதிகளை திருப்பியனுப்ப முடியாது: ஒபாமா திட்டவட்டம்

‘அமெரிக்காவுக்குள் தஞ்சம் புக வரும் அகதிகளை மத அடிப்படையில் நோக்க முடியாது. ஒருவர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே அவரை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் திருப்பியனுப்ப முடியாது’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

ஐநா பொதுச் சபையின், 71-வது கூட்டத்தொடரின் இடையே, சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் அகதிகள் தொடர்பான மாநாடு, அமெரிக்கா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, 

‘அண்மைக்காலங்களில் சர்வதேச அளவில் 6.5 கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 2-ம் உலகப் போருக்குப் பிறகு, தற்போது அதிக அளவில் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 

இவர்களில் 2.1 கோடி பேர், சொந்த மண்ணையும், உறவுகளையும் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உடுத்த உடையை மட்டும் சுமந்துகொண்டு நாட்டைவிட்டு வெளியேறியவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலைமையில் நம்மிடம் தஞ்சம் புக வருவோரை, அவர்களின் மதத்தைப் பார்த்து நாம் அனுமதிக்க முடியாது. உதாரணமாக, ஒருவர் முஸ்லிம் என்பதற்காகவே, அவருக்கு தஞ்சமளிக்க முடியாது எனக் கூறிவிட முடியாது. அப்படிச் செய்தால், நம்மைப் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற தீவிரவாதிகளின் பிரச்சாரம் உண்மையாகிவிடும்.

மாறாக, வேற்றுமையில் ஒற்றுமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் போது, கடுமையான சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் போலியானவர்களை தடுத்துநிறுத்தலாம்.

அமெரிக்கா மீது பற்றுள்ள, கடினமாக உழைக்கக் கூடிய பல அகதிகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். தொழில்துறையிலும் சாதித்து வருகின்றனர். அகதிகள் நாட்டை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு’ என்றார்.

அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வித்திடும் என, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் கடந்த ஓராண்டு காலமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், இவ்விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஒபாமா பேசியுள்ளார்.

ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

source: kaalaimalar