ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

சட்டமன்றத்தை கூட்டி ஆளுனர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்டம்

 

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும் தான்தோன்றித்தனமாக பேசியுள்ளார். ஆளுநரின் ஆணவப் பேச்சுக்கு வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான மோகன்காமேஸ்வரன், பழனிச்சாமி, முகமதுரீலா, பாலாஜி, தணிகாசலம், ராமமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி, கங்காராஜசேகர், ஆர்.பி.சிங், கே.எம்.ஷெரியன், கசாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் ஆளுநரே!

தமிழ்நாட்டின் ஆளுநர், அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை சிதைக்கிறார். அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு, உண்மைக்குப் புறம்பாக, எந்தவொரு தரவுகளும் இல்லாமலும் அவர் மனதில் தோன்றிய கருத்துக்களைப் பேசியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயை லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போவதாக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்பிற்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம், அமைச்சரவை, முதலமைச்சர் ஆலோசனைப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறைக்கு எதிரான அதிகார வர்க்க ஏதேச்சாதிகார முறையில் செயல்படுவது தமிழ்நாட்டின் அமைதி நிலைக்கு குந்தகம் ஏற்படுத்துகிறது.

இளநிலை மருத்துவம் பயில நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்து விட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து கூட்டம் நடத்தி வருகிறார். இதன்படி இன்று (12.08 2023) நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் “நீட்” தேர்வு எழுதுவது தொடர்பான சிரமங்களை தெரிவித்து, அதற்காக பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் கட்டாயம் ஏற்படுவதையும் அனுபவரீதியாக எடுத்துக் கூறி,” நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கான கோரிக்கை சட்ட மசோதா 2021 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தாங்கள் எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என வினா எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காத ஆளுநர், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு நான் ஒரு போதும் ஆதரித்து கையெழுத்து போட மாட்டேன்” என ஆணவத்தோடு பதிலளித்து, பெற்றோர்களை மிரட்டி அச்சுறுத்தி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை ஜனநாயக முறைகளை நிராகரித்து செயல்படும் ஆளுநரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-and-communist-condemns-tamil-nadu-governor-rn-ravi-neet-comments-738193/