செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை : தமிமுன் அன்சாரி!

 

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் களியலில் சிறுபான்மை இயக்கம் சார்பாக கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூறியதாவது:

“மணிப்பூரில் கலவரம் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த கலவரத்தை மணிப்பூர் மாநில அரசும், பாஜக அரசும் விரும்புகிறது என்பதை நாட்டுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பலம் வாய்ந்த இந்திய ராணுவத்தால் கலவரத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம் பார்க்கிறது.

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர்
விஷயத்தில் தலையிடாமல் இருப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் இரண்டு மணிநேரத்தில் விவாதத்தை முடிக்க முயல்வது அவர்களுடைய தந்திரம். இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் கூற மறுக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வலதுசாரி சிந்தனையாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் பெற முயல்கிறார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது. மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில முதல்வர் மீது சட்டபூர்வமாக வழக்குபதிவு செய்து கைது செய்யவேண்டும்.

பெரியார் அண்ணா கோட்பாடுகளுக்கு எதிராக அதிமுக தற்போது சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்திருந்தது
ஆனால் அதிமுகவை அடமானம் வைக்கவில்லை. தற்போது அதிமுக அமித்ஷா திமுகவாக உள்ளது. அதிமுக தொண்டர்களே இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.


source https://news7tamil.live/aiadmk-workers-did-not-accept-bjp-alliance-tamimun-ansari.html