மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.
8 8 23
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், பாஜக அரசுக்கு எதிராக, மக்களவையில் ஜூலை 26 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இத்தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராகுல்காந்தி , எதிர்க்கட்சிகள் சார்பில் உரை நிகழ்த்த உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
source https://news7tamil.live/opposition-parties-vote-of-no-confidence-in-central-bjp-government-debate-in-parliament-today-and-tomorrow.html