வியாழன், 7 டிசம்பர், 2023

1 கேன் தண்ணீர் ரூ. 200... அரை லிட்டர் பால் ரூ. 100; ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல்

 

Semmancheri protest

செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 கேன் தண்ணீர் 200 ரூபாய்க்கும் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி புதன்கிழமை ஓ.எம்.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிகப்பட்டனர்.

இதில் செம்மஞ்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுனாமி நகர் மற்றும் குமரன்நகர் பகுதியில் குடிநீர், பால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தத்தளித்து வந்தனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் மற்றும் பால் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, செம்மஞ்சேரி பகுதியில் சில வியாபாரிகள் 1 கேன் தண்ணீர் 200 ரூபாய், அரை லிட்டர் பால் 100 ரூபாய் என மிக அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இதனால், பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். 

செம்மஞ்சேரியி குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றாமல், அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு அதிகாரிகளும் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், 1 கேன் தண்ணீர் 200 ரூபாய், அரை லிட்டர் பால் 100 ரூபாய் என மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் திடீர் சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

செம்மஞ்சேரி, சுனாமி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள மழைநீர் வெளியேற்றப்படவில்லை என்றும், கடந்த 2 நாட்களாக மின்சாரம், குடிநீர், பால், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்கூட இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஓ.எம்.ஆர் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு அதிகாரிகள் தரப்பில் விரைந்து மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/floods-affected-semmancheri-people-road-block-protest-need-basic-facilities-1812977