ஞாயிறு, 10 டிசம்பர், 2023

மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

அரசு தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதோடு வெள்ள நீர் சூழந்துள்ள பகுதிகளில் சிக்கியிருப்போருக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக உணவு, குடிநீர் வழங்குவதோடு, படகுகள் வாயிலாக வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), எம். செல்வராசு (நாகபட்டினம்), சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர்கள் தி.இராமச்சந்திரன் (தளி) மற்றும் க.மாரிமுத்து (திருந்துறைப்பூண்டி) ஆகியோர் சென்னை பெரு மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/migjam-affected-communist-party-of-india-reports-that-it-will-donate-one-months-salary-of-mlas-and-mps-to-the-relief-fund.html