திங்கள், 12 பிப்ரவரி, 2024

உங்க வீட்ல எனக்கு ஓட்டு போடலனா.. 2 நாள் சாப்பிடாதீங்க: சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏ

 சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) தரப்பை சேர்ந்தவரும், களம்நூரி எம்எல்ஏவுமான சந்தோஷ் பங்கர், வரவிருக்கும் தேர்தலில் பெற்றோர் தனக்கு வாக்களிக்காவிட்டால், இரண்டு நாட்களுக்கு உணவை மறுக்குமாறு பள்ளி மாணவர்களிடம் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் கடுமையான அறிவுறுத்தல்கள் இருக்கும் நிலையில்,  அவரது கருத்துக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை ஜில்லா பரிஷத் நடத்தும் தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம், “வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாள்கள் சாப்பிட வேண்டாம்"

“உங்கள் பெற்றோரிடம் எம்எல்ஏ சந்தோஷ் பங்கருக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில், பள்ளியின் ஆசிரியர்களும் மற்ற ஊழியர்களும் சிரித்துக் கொண்டிருந்தபோதும், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சொல்லும் வரிகளை மீண்டும் சொல்ல கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) தலைவர்கள் பாங்கரை அவரது கருத்துக்களுக்கு சாடினார்கள். மேலும் தேர்தல் ஆணையம் அதன் உத்தரவுகளை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

சிவசேனா எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் வெளியிட்ட பிறகு, பாங்கர் கூறுகையில், தகுதி நீக்கம் மற்றும் சிவசேனாவின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் தைரியமாக கூறியுள்ளோம். ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்று மீண்டும் தைரியமாகச் சொல்கிறேன். நரேந்திர மோடி பிரதமராகவில்லை என்றால், நான் (தற்கொலை செய்து) பொதுமக்கள் முன்னிலையில் இறப்பேன்” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/dont-eat-for-2-days-if-your-parents-wont-vote-for-me-sena-mla-santosh-bangar-stirs-row-with-remark-to-school-students-3688736