ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

அரசியல் அறிக்கை; காகிதம் மட்டுமே வெள்ளை

 நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்துள்ள பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பின.

மக்களவையில் "இந்தியப் பொருளாதாரம் மற்றும் இந்திய மக்களின் வாழ்வில் அதன் தாக்கம்" மீதான விவாதத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அமர்வின் முடிவில் பேசுகையில், இந்த வகையான வெள்ளை அறிக்கைக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது என்றும், 10 ஆண்டுகால யு.பி.ஏ அரசாங்கத்தை களங்கப்படுத்துவே அதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார். 

"தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் அறிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. அதற்கு தான் இது போன்ற வெள்ளை அறிக்கையைக் கொண்டுவர உங்களைத் தூண்டியது." என்றும் அவர் கூறினார். 

மேலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காந்தி குடும்பத்தையும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் குறிவைத்த பா.ஜ.க.வை கடுமையாக சாடினார். “ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு குடும்பத்தையும் நேருவையும் துஷ்பிரயோகம் செய்வதால் உங்களுக்கு என்ன லாபம்?. வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், அந்தக் கட்சி அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மோடியை தவறாகப் பயன்படுத்தினால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? நீங்கள் அதை விரும்புகிறீர்களா? அது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறிய அவர், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக காங்கிரஸ் ஒருபோதும் பேசுவதில்லை" என்று கூறினார். 

காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி வெள்ளை அறிக்கையை "அரசியல் அறிக்கை" மற்றும் அரசாங்கத்தின் "கருப்பு தூரிகை" என்று கூறினார். யு.பி.ஏ இயற்றிய தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை, உணவு உரிமை, மற்றும் 100 நாள் வேலை திட்டம் (MGNREGA) போன்ற சட்டங்கள் நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தியது என்றார்.

தி.மு.க எம்.பி வி. கலாநிதி பேசுகையில், 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, பெட்ரோல், எரிவாயு விலையை பாதியாகக் குறைப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. “10 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்கிறீர்கள், அங்கு இந்த விஷயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வெள்ளை அறிக்கையில் பணமதிப்பு நீக்கம், அதன் விளைவுகள் மற்றும் அது என்ன சாதித்தது என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று அவர் கூறினார்.

பணமதிப்பு நீக்கம் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக நிதியமைச்சர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். யு.பி.ஏ அரசாங்கத்தின் திட்டங்களுக்காகப் பாராட்டிய ராய், “யு.பி.ஏ-வில் எல்லாம் நன்றாக இருந்தது என்று நான் சொல்லவில்லை. ஆனால் யு.பி.ஏ ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் (MGNREGA), உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை, ஆதார் ஆகியவற்றை அமல்படுத்தியது.  “நீங்கள் ஏழைகளுக்காக என்ன பெரிய நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதைக் காட்டுங்கள். பொருளாதார சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளன." என்று அவர் கேள்வி எழுப்பினார். 

ஐ.யு.எம்.எல் எம்.பி இ.டி முகமது பஷீர், வெள்ளை அறிக்கை உண்மையில் "பா.ஜ.க, பா.ஜ.க, பா.ஜ.க  மற்றும் பா.ஜ.கவின் தேர்தலுக்கான காகிதம்" என்றார்.

"யு.பி.ஏ அரசாங்கத்தின் கீழ், சராசரி ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது, ஆனால் மோடியின் ஆட்சியில் அது சராசரியாக 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று கூறிய அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "இதற்கு யார் பொறுப்பு - சீனா அல்லது பாகிஸ்தானா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், "இந்த வெள்ளை அறிக்கை பொருளை விட சொல்லாடல். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏழைகளை சீரழித்தது ஆனால் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தாத்ரியில் முகமது அக்லாக் தொடங்கி 2014 முதல் 2024 வரை எத்தனை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். எத்தனை வீடுகள் புல்டோசர்களால் அழிக்கப்பட்டன. இந்தியாவில் 2,000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதா இல்லையா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  2014ல் உங்களுக்கு ஒரு முஸ்லிம் வசீர் (அமைச்சர்) இருந்தார். ஆனால் தற்போது யாரும் இல்லை” என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.

சரத்சந்திர பவார் கட்சி எம்.பி சுப்ரியா சுலே வெள்ளை அறிக்கையை "அரசியல் வண்ண காகிதம்" என்று அழைத்தார். அதில் காகிதம் மட்டுமே வெள்ளையாக இருக்கிறது என்றும், யு.பி.ஏ ஆட்சியின் போது வேலையின்மை விகிதம் 2.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அது 6.6 சதவீதமாக உள்ளது என்றும் கூறினார். 

ஜே.எம்.எம் எம்.பி விஜய் குமார் ஹன்ஸ்டாக் கூறுகையில், அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். “ஜார்க்கண்டில் ஒரு முதல்வர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஹேமந்த் சோரன் விடவில்லை,'' என்றார்.

source https://tamil.indianexpress.com/india/bjp-white-paper-opposition-calls-political-manifesto-aimed-at-scoring-electoral-brownie-point-tamil-news-3680638