This News is Fact Checked by Newschecker
காஷ்மீர் குறித்து 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து தற்போது தெரிவிக்கப்பட்ட கருத்து என திரித்து பரப்பப்படுவது அம்பலமாகியுள்ளது.
பரப்பப்பட்ட செய்தி: காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் உறுதியளித்தார்.
உண்மை:
இந்த வீடியோ டிசம்பர் 2018 க்கு முந்தையது, மேலும் காங்கிரஸ் தலைவர் சாகீர் சயீத் கானின் கருத்துக்கள் அக்கட்சியின் சார்பில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது.
காஷ்மீரில் “அப்பாவிகளை” பாஜக கொன்றுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ஹாஜி சாகீர் சயீத் கான் குற்றம் சாட்டிய அந்த வீடியோ தற்போது பரப்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறியதாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. இதன்படி, “இந்திய ஆயுதப் படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ₹1 கோடி வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் உறுதியளித்துள்ளார்” என்று பல பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர், மேலும் இது காங்கிரஸ் கட்சியின் “உண்மையான முகத்தை” வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் நியூஸ்செக்கர் இந்த வீடியோ 2018-ஆம் ஆண்டுக்கு முன் பேசப்பட்ட வீடியோ என்பதை கண்டறிந்துள்ளது.
அந்த வீடியோவில் கான், “காஷ்மீர் முன்பு சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது, இப்போது பிணங்களால் நிரம்பியுள்ளது… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இங்கு கொல்லப்பட்ட அந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடும், ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும். பயங்கரவாத வழக்குகளில் சிறையில் இருக்கும் அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்கள். இங்கு நடந்த கொலைகளுக்குக் காரணமான பாஜக தலைவர்கள், அவர்கள் எவ்வளவு முக்கியஸ்தர்களாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் இருந்தாலும், புதிய சட்டம் இயற்றப்படும், அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சாகீர் சயீத் கான் கூறியிருந்தார்.
உண்மைச் சரிபார்ப்பு:
வீடியோவை கவனமாக ஆய்வு செய்ததில், ரிபப்ளிக் சேனலின் வாட்டர்மார்க் மேல் இடதுபுறத்திலும், கீழ் வலது மூலையிலும் காட்சிகளைக் கண்டோம்.
ரிபப்ளிக் வேர்ல்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், சாகீர் சயீத் கான், “1 கோடி” மற்றும் “காஷ்மீர்” என்ற முக்கிய வார்த்தைகளை நாங்கள் தேடினோம். இதன் வாயிலாக டிசம்பர் 26, 2018 தேதி வெளியான செய்தியை காண முடிந்தது. மேலும் இது தற்போது வைரலாகும் காட்சிகளைக் கொண்டிருந்தது.
(ரிபப்ளிக் வேர்ல்டின் YouTube வீடியோவில் இருந்து ஸ்கிரீன்கிராப்)
இதே போன்று, டிசம்பர் 27, 2018 தேதியிட்ட ஏபிபி செய்தியிலும் இந்த வீடியோ இடம் பெற்றிருந்தது. ‘காங்கிரஸ் தலைவர் சகீர் சயீத் கானின் பேட்டியில், “பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவோம். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசு வேலை வழங்குவோம். பயங்கரவாத சந்தேக நபர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று கான் கூறினார்.
(ABP News வழங்கும் YouTube வீடியோவில் இருந்து Screengrab)
இச்சம்பவத்தை விவரமாக, டிசம்பர் 27, 2018 தேதியிட்ட இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “காங்கிரஸ் தலைவர் சாகீர் சயீத் கான் பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு ரொக்க வெகுமதியையும் அறிவித்தார். ஜம்முவில் உள்ளூர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர், பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) குறிவைத்து, ஜம்மு காஷ்மீரில் “அப்பாவி மக்கள் மீது காவி கட்சி அட்டூழியங்களை” செய்து வருவதாக கூறினார்.
சாகீர் சயீத் கானின் கருத்துக்களை கட்சி நிராகரிக்கிறது என்று ஜம்மு & காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா கூறினார். அதில் “சகீர் சயீத் கானின் அறிக்கையை காங்கிரஸ் மறுத்து நிராகரிக்கிறது. அவர் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் எங்கள் பாதுகாப்புப் படைகளுடன் நிற்கிறோம்,” என்று ரவீந்தர் சர்மா கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26, 2018 தேதியிட்ட ஜம்மு & காஷ்மீர் காங்கிரஸின் ஃபேஸ்புக் இடுகையில், ரவீந்தர் ஷர்மா கானின் கருத்துக்களை நிராகரித்த வீடியோ பேட்டியையும் நாங்கள் கண்டோம்.
அதில், பயங்கரவாதத்தை கடுமையாகக் கையாள வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் சர்மா கூறினார். மத்திய தலைமையின் ஒப்புதலுடன் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரின் ஒப்புதல் இல்லாமல் இந்த விஷயத்தில் எந்தவொரு கொள்கை அறிக்கையையும் வெளியிட எந்தவொரு தனிநபருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் கூறினார்.
முடிவுரை:
ஜம்மு & காஷ்மீர் குறித்த சகீர் சயீத் கானின் கருத்துகளின் 2018 வீடியோ, காங்கிரஸ் தலைவரின் சமீபத்திய கருத்துகளாக தவறாகப் பகிரப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. அவரது கருத்தை அப்போதே காங்கிரஸ் நிராகரித்து மறுத்துள்ளது.
source https://news7tamil.live/the-statement-made-by-the-congress-leader-in-2018-about-kashmir-is-being-distorted-and-spread-as-the-current-statement.html