மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடியும் உ.பி-க்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 09 அன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி உட்பட 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
நேற்று பிரதமர் இல்லத்தில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முடிவில் அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.14,056 கோடியும் , மத்திய பிரதேசத்திற்கு ரூ.10,970 கோடியும் வரி பகிர்வு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிற்கு வரிப்பு பகிர்வு நிதியாக ரூ. 5,700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது இரண்டாவது முறையாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி பகிர்வை அளித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ரூ.2,79,500 கோடி நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/center-releases-tax-sharing-fund-for-states-tamil-nadu-rs-5700-crore-rs-25069-crore-financial-release-for-up.html