புதன், 15 ஜூலை, 2026

டெல்டாவில் மணல் குவாரி: குஜராத்தை அணுகும் தமிழக அரசு

 



source https://tamil.indianexpress.com/tamilnadu/pr-pandian-demands-explanation-from-cm-vijay-on-opening-sand-quarries-in-cauvery-delta-approaching-gujarat-firm-12164503

டெல்டாவில் மணல் குவாரி: குஜராத்தை அணுகும் தமிழக அரசு


காவிரி டெல்டாவில் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைப்பதற்குத் தமிழக அரசு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்தை அணுகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே கட்டுக்கடங்காத மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் பாழடைந்து, கடல் நீர் உட்புகுந்துள்ள நிலையில் மீண்டும் குவாரிகளைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், விவசாயிகள் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க முதலமைச்சர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
15 7 2026

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

தி.மு.க ஆட்சி காலத்தில் விவசாயின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

காவிரி டெல்டாவில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. கிராமப் புறங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. குறுவைக்கு நேரடி விதைப்பு செய்து தண்ணீரினறி, மழையுமின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காப்பீடு செய்து உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தமிழக அரசு அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

காவிரி டெல்டாவில் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு குஜராத் தனியார் நிறுவனத்தை தமிழக அரசு அணுகி வருவதாக ஊடகங்களில் வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே கட்டுக்கடங்காத மணல் கொள்ளையால்  நிலத்தடி நீர் பறிபோயிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பறிபோய் விட்டது. பல இடங்களில் ஆறுகள் பாசன கட்டமைப்பை இழந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மணல் குவாரிகள் அமைப்பதற்கு குஜராத்தை சார்ந்த தனியார் நிறுவனத்தை தமிழக அரசு அனுகி வருவது குறித்து தமிழக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 
டெல்டாவில் மணல் குவாரிகள் அமைப்பதை கைவிட்டு, மாநில மக்களுக்கு தேவையான மணலை அரசு நேரடி கட்டுப்பாட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்ய முன்வர வேண்டும். வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் மணல் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முழுமையிலும் தமிழக முதலமைச்சர் வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினார். ஆனால் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2024ம் ஆண்டுகளில் கனிமவளத்துறை மூலம் வழங்கிய வண்டல் மண் குவாரிகள் மூலம் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. விவசாயிகள் தனக்கு சொந்த பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் அவசர நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநில அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர், நாகை மாவட்ட தலைவர் புலியூர் பாலசுப்பிரமணியன், நாகப்பட்டணம் ஒன்றிய செயலாளர் செல்லப்பா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்