source https://tamil.indianexpress.com/india/neet-paper-leak-trial-to-begin-on-nov-25-12822128
/indian-express-tamil/media/media_files/2026/11/19/neet-paper-leak_20260729205359_20261118065723_20261119000432-2026-11-19-10-02-47.webp)
2026 நீட் (NEET UG) வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டெல்லி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 18) உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 25-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் தொடங்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பதிப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) பிரிவு 63 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), ஊழல் தடுப்புச் சட்டம், பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஆகியவற்றின் கீழ் சிபிஐ (CBI) சுமத்தியுள்ள இதர பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டார்.
இந்த வழ்க்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், ஏதோ ஒரு வகையில் இந்த ரகசிய ஆவணங்களை மிகப் பெரிய அளவில் பகிர்ந்துள்ளனர் அல்லது விநியோகித்துள்ளனர். திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு வெகு முன்னதாகவே நாடு முழுவதும் இந்த ரகசியத் தகவல்கள் பரவுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது. இதன் விளைவாக 2026 நீட் (UG) தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு கருவூலத்திற்குப் பல கோடி ரூபாய் தேவையற்ற இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான நீட் தேர்வர்களும் நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று சிறப்பு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொழிபெயர்ப்பு, மறுமொழிபெயர்ப்பு மற்றும் பிழைதிருத்தம் ஆகிய பணிகளுக்காக தேசியத் தேர்வு முகமையால் (NTA) குற்றம் சாட்டப்பட்ட இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வினாத்தாள் தொகுப்புகள், தேசியத் தேர்வு முகமையின் அறிவுசார் சொத்தாகும் (பதிப்புரிமை பெற்றது),” என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், சுபம் கைர்னார், தனஞ்சய் லோகண்டே, பிரகலாத் குல்கர்னி, தேஜஸ் ஹர்ஷத் குமார், டாக்டர் மனோஜ் ஷிருரே, சிவ்ராஜ் ரகுநாத் மோட்டேகாவ்ன்கர், மனிஷா வாக்மரே, மனிஷா மந்தாரே, மனிஷா சஞ்சய் ஹவல்தார் மற்றும் சேஷ்ராவ் பஜ்ரங் சூர்யவன்ஷி ஆகியோரே குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் தேசியத் தேர்வு முகமை பாட நிபுணர்கள் ஆவர்; மற்றவர்கள் தேர்வர்கள் மற்றும் கசிந்த வினாத்தாளைப் பரப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடைத்தரகர்கள் ஆவர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 21-ஆம் தேதிக்குப் பட்டியலிட்ட நீதிபதி குப்தா, முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்தக் கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ வாய்ப்பு அளிக்கப்படும்; அதன்பிறகு விசாரணை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், சக குற்றவாளிகளுடன் சதித்திட்டம் தீட்டி, இதற்கென ஒரு கூட்டமைப்பை (syndicate) திட்டமிட்ட முறையில் நடத்தி, ரகசிய வினாக்களைக் கசியவிட்டுப் பரப்பியுள்ளனர் (வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் பெரும்பாலான கேள்விகள் தேர்வில் வந்ததைப் போலவே இருந்ததால், இதைக் கசிந்த வினாத்தாள் என்றே கருத முடியும்),” என்று சிறப்பு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மே 3-ஆம் தேதி சுமார் 22 லட்சம் தேர்வர்களால் எழுதப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு தேசியத் தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி தேசியத் தேர்வு முகமை மறுதேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.





