source https://tamil.indianexpress.com/india/cyclone-akvan-shifts-track-north-andhra-south-odisha-on-alert-14-districts-red-warning-12821421
/indian-express-tamil/media/media_files/2026/11/18/cyclone-akvan-ndrf-cuttack-x-2026-11-18-22-53-05.jpg)
'அக்வான்' புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, 3-வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) 5 குழுக்கள் ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Photograph: (Photo: X/@03NDRF)
எழுதியவர்: சுஜித் பிசோயி
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தனது திசையை மாற்றிக்கொண்டு, வடக்கு ஆந்திரப் பிரதேசம், ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி வடக்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருவதால், ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, 'அக்வான்' (Akvan) புயல் நவம்பர் 20-ம் தேதி நண்பகலுக்குள் மசூலிப்பட்டினம் மற்றும் பூரி இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
“ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கப்பட்டினத்திற்கும் ஒடிசாவின் கோபால்பூருக்கும் இடையே எங்கு வேண்டுமானாலும் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. பூரி வரை பலத்த காற்றின் தாக்கம் உணரப்படுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் எச்சரிக்கையைப் பூரி வரை நீட்டித்துள்ளோம். சில வானிலை மாதிரிகள் புயல் மீண்டும் திசை மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கின்றன” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் அதனுடன் இணைந்த கனமழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கஜபதி, கஞ்சம், பூரி, குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், நயாகர், கட்டாக், ஜாஜ்பூர், தேன்கனல், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய 14 கடலோர மற்றும் அதையொட்டிய மாவட்டங்களுக்கு ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், இவற்றில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
6 தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புயல் அச்சுறுத்தலை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விடுமுறை நவம்பர் 22-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய மக்களை அடையாளம் கண்டு, முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய கடலோர மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள், கடற்கரையோரங்கள் அல்லது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் புயல் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட உள்ளனர்.
கடந்த மாதம் 'அர்னாப்' புயலைத் தொடர்ந்து பெய்த பேய்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது 'அக்வான்' புயலின் தாக்கத்தால் மற்றொரு சுற்று கனமழை பெய்யவுள்ள நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படை (ஓ.டி.ஆர்.ஏ.எஃப்) மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட குழுக்கள் தேவையான உபகரணங்களுடன் பல்வேறு மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
புயலின் திசை மாற்றத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் சிறப்பு நிவாரண ஆணையர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்தார்.
“நிலவரம் குறித்து எமது அதிகாரிகள் மத்திய அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மத்திய அரசும் எங்களுக்கு உறுதியளித்துள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று பூஜாரி கூறினார்.
முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களாகப் பணியாற்றிய 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விரைவான மீட்புப் பணிகளை உறுதி செய்வதற்காகப் பல்வேறு துறைகளும் மூத்த அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களைப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளன.
சில மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் அல்லது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், சாத்தியமான வெள்ள நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அணுக முடியாத பகுதிகளுக்கு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அழைத்துச் செல்ல விசைப்படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு நிவாரண அமைப்பின் விசைப்படகுகளைச் சரிபார்த்து, பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக சாலைப் போக்குவரத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அரசு, புயல் ஓய்ந்த பிறகு வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் கூடுதல் குழுக்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறது.
19 11 2026





