திங்கள், 3 அக்டோபர், 2016

'நோபல் பரிசு' உருவான கதை: உலகின் கவுரமிக்க விருதின் பின்னணியை நினைவுகூர்வோம்

உலக அளவில் கவுரமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 1901ஆம் ஆண்டு முதல் மனிதகுல வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கவுரமிக்க விருது ஒரு விஞ்ஞானியின் அச்சத்தால் உருவானது என்றால், நம்பமுடிகிறதா?. வெடிபொருள்களில் ஒன்றான டைனமைட்டைக் கண்டறிந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரெட் நோபல் தான் அந்த விஞ்ஞானி.
யார் இந்த ஆல்ஃபிரெட் நோபல்..
ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்க்ஹோமில் 1833ஆம் ஆண்டு அட்டோபர் 21-ல் மானுவல் நோபல் எனும் பொறியாளருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் விருப்பப்படி, வேதியியல் துறையில் பட்டம் பெற்ற நோபல், 1866ஆம் ஆண்டில் டைனமைட்டைக் கண்டுபிடித்தார். மேடான பகுதிகளைச் சமப்படுத்துதல், மலைப்பகுதிகளில் சாலை அமைத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு டைனமைட்டை நோபல் பயன்படுத்தினார். இதனால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் ரஷ்யா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிற்சாலைகளை நோபல் நிறுவினார்.
அவரது கண்டுபிடிப்பு அழிவுக்கும் பயன்படுத்தப்படுவது கண்டு மனம் பதைத்த நோபல், அதன் தீவிரத்தை உணர்ந்தது 1888ஆம் ஆண்டில். அந்த ஆண்டில் நோபலில் சகோதரர் லுட்விக் மரணமடைந்ததை, நோபலே மறைந்துவிட்டதாகக் கருதி, மரணத்தின் வியாபாரி மரணித்துவிட்டார் என்று பிரெஞ்சு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் மனமுடைந்த நோபல், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த தன்னை உலகம் மோசமாக வர்ணிக்கும் என்று எண்ணினார். இதையடுத்து, தனது செல்வங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிய நோபல், ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதன்மூலம் மனிதகுல வளர்ச்சிக்குப் பாடுபடுவோருக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்க வேண்டும் என எண்ணார். அவர் 1896ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மறைந்தார். அவர் இறந்து 5 ஆண்டுகள் கழித்து 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசின் முக்கியத்துவம்..
உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 5 பிரிவுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் 1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
மதிப்புமிக்க இந்த விருதினை இயற்பியல் விஞ்ஞானி ஆல்பரெட் ஐன்ஸ்டீன், மேரி கியூரி, மார்டின் லூதர் கிங் மற்றும் எர்னெஸ்ட் ஹெம்மிங் வே ஆகிய பிரபலங்கள் பெற்றுள்ளனர். 1900-களில் ஒரு பேராசியரின் 20 ஆண்டுகள் ஊதியத்துக்குச் சமமான தொகை நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்றைய சூழலில் நோபல் பரிசு பெறுவோருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.62 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. நோபல் பரிசு, கடந்த 1901ஆம் ஆண்டு முதல் தனிமனிதர்கள், அமைப்புகள் என 900 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நோபல் பரிசு வென்றவர்கள்..
கடந்த 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை ரவீந்திரநாத் தாகூர், 1930-ல் சர்.சி.வி.ராமன் இயற்பியல் துறையிலும் நோபல் பரிசு பெற்றனர். வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் தனது வாழ்வின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்த அன்னை தெரசாவுக்குக் கடந்த 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதரத் துறைக்கான நோபல் பரிசு அமர்தியா சென்னுக்கு 1998ஆம் ஆண்டும், அமைதிக்கான நோபல் பரிசினை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுடன் இணைந்து கடந்த 2014-ல் பெற்றார் குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி.
மேலும், ஹர் கோபிந்த் கோரானா சுப்ரமணியன் சந்திரசேகர் உள்ளிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்களும் நோபல் பரிசினை வென்றுள்ளனர். இதேபோல, சிதம்பரத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு 2016..
நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்க்ஹோமில் நடக்கும் விழாவில் வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான விருது பெற்றவர்கள் விபரம் நாளை முதல் நாளுக்கொரு துறையாக அறிவிக்கப்படும். அந்தவகையில் முதல்துறையாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு நாளை (அக்டோபர் 3) அறிவிக்கப்படுகிறது. இயற்பியல் துறைக்கான அறிவிப்பு அக்டோபர் 4-ம் தேதியும், வேதியியல் துறைக்கான அறிவிப்பு அக்டோபர் 5-ம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு அக்டோபர் 7ஆம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று நோபல் பரிசுக்கான கமிட்டி அறிவித்துள்ளது.

Related Posts: