மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மதுசூதன் தாஸின் போராட்டம் காரணமாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாக ஒரிசா கடந்த 1936-ல் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ’மெட்ராஸ் ராஜதானி’ -யையும் மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்தது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது மறைவால் வெடித்த வன்முறையை அடுத்து ஆந்திரா தனிமாநிலமாக பிரிக்கப்படுவதாக 1953-ல் பிரதமர் நேரு அறிவித்தார்.
இதன்பின்னர் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க ஃபசல் அலி, எம்.பனிக்கர் மற்றும் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய குழு 1953-ல் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 2 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி தங்களது அறிக்கையினை 1955-ல் அளித்தனர். அந்த குழுவின் அறிக்கையின்படி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா என 1956ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரிக்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழகம் என அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 1967ம் ஆண்டு ஜூலை 18-ல் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலம் மாற்றப்பட்டது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்களாவர்.
October 31, 2016 - 03:37 PM