சனி, 15 அக்டோபர், 2016

இஸ்லாமிய விவாகரத்து சட்டம் பற்றி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானவை.

இஸ்லாமிய விவாகரத்து சட்டம் பற்றி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானவை.
1. 1980 ஷா பானு ஜீவனாம்சம் வழக்கு: விவாகரத்து பெற்ற பின் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க இஸ்லாத்தில் அவசியம் இல்லை என்று மறுக்கப்பட்டதால் வழக்கு நீதி மன்றத்திற்கு செல்கிறது அன்று இருந்த பிரதமர் ராஜீவ் காந்தி தலையீட்டின் பெயரில் இனி வஹ்பு வாரியம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு இடப்படுகிறது.
ஷரியத் சட்டம்: ஒரு கணவன் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இருவரும் அன்னிய ஆண் பெண் ஆகிவிடுவதால், அன்னிய ஆணிடம் இருந்து பணம் பெறுவதை தடை செய்கிறது. அதற்கு பதிலாக ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை இல்லை சொத்துக்களை வழங்க பரிந்துரைக்கிறது. இதுவும் கூட பெண்ணின் நலன் கருதியே.
மணமுறிவு ஏற்பட்ட பின் அவன் வேறு ஒரு மனைவியுடன் வாழும் சூழலில் மாதம் மாதம் ஜீவனாம்சம் கொடுப்பது சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் சிறிது காலம் கொடுத்துவிட்டு பின்பு கொடுக்க படாமலும் போகலாம்.. அந்த பெண் ஜீவனாம்சம் பெற அலையவேண்டிய நிலையும் மன உளைச்சலும் ஏற்படும். இன்று நிலுவையில் இருக்கும் பல வழக்குகளில் ஜீவனாம்சம் சரியாக தரப்படவில்லை என்ற வழக்கும் அதிகம். இதனால் தான் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம் கொடுக்க சொல்கிறது இஸ்லாம்.
2. 1995 இந்து ஒருவர் முஸ்லிமாக மாறி திருமணம் செய்த வழக்கு. பொது சிவில் சட்டம் கொண்டு வர காரணமான வழக்கும் கூட.
இந்து பெண்ணை திருமணம் செய்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், "முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
"அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்'' என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
"குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்'' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.
நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
நீதிமன்றங்கள் மீது சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம் பிரிவு 44 வெளிவந்த அதே ஆண்டு வெளியிடப்பட்ட பிரிவு 45 அனைவருக்கும் கல்வி 10 ஆண்டுக்குள் . பிரிவு 46 இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் போன்றவற்றை பற்றி எந்த நீதிமன்றமும் மத்திய அரசுக்கு உத்தரவு போட்டதாக தெரியவில்லை.
இஸ்லாம் ஷரியத்: ஒருவர் முஸ்லிமாக மாறும் பொழுது அவர் மனைவியோ, கணவனோ அதை ஏற்க மறுத்தால் முறையாக விவாகரத்து செய்யவேண்டும் இதை அந்த நபர் செய்யவில்லை. இஸ்லாமிய சட்டம் சரியில்லை என்பது இங்கும் சொல்லப்படவில்லை.
3. 2016 ஒரே முறையில் மூன்று தலாக் கூறுவதற்கு எதிரான வழக்கு.
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லவோ , செல் போன் , sms மூலம் தலாக் கொடுக்கவோ அனுமதி இல்லை. மூன்று தலாக் என்பது மூன்று விதமான காலக்கட்டதை குறிப்பதே .. இங்கும் இஸ்லாமிய சட்டம் என்பது தவறு என்று எங்கும் சொல்லபடவில்லை. நீதிமன்றமும் கூட இஸ்லாமிய சட்டத்தில் இல்லாத இந்த முறையை தடை செய்யலாம் என்று தான் கூறியுள்ளது.
மேல் கூறிய மூன்று வழக்கிலும் இஸ்லாமிய சட்டம் முறையாக அமுல்படுத்தப்படாமலும், அதை பற்றிய தெளிவு இல்லாமலும் செய்யப்பட்டவையே தவிர இன்றைய பிஜேபி அரசு சொல்வது போல் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அல்ல.
இப்படி நடக்கும் சிற்சில தவறுகளை தவிர்க்க வகுப்புவரிய தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவையோ அல்லது மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கி அதை அரசு கண்காணிக்கலாம். அதற்காக தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது. அடுத்தவன் வீட்டுக்குள் இருக்கும் சட்டம், கொள்கை, கலாசாரம் என்ன என்றே தெரியாமல் ஒருத்தன் பஞ்சாயத்து பண்ணவருவது போலத்தான் அமையும்..
அதே போல பாஜக இதில் அதிகம் ஆர்வம் காட்ட இன்னொரு காரணமும் உள்ளது பிரிவு 343 படி பொது சிவில் சட்டம் வந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி அறிவிக்கப்படும். மொழிவாரி மாநிலங்களான தமிழகம் போன்றவற்றில் ஹிந்தி திணிக்கப்பட்டு பிராந்திய மொழிகளுக்கான உரிமை பறிக்கப்படும்.
இந்தியா என்பது பல மொழி, மதம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட ஒரு நாடு. பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அனைவரின் உரிமையையும் பறிக்க முனைகிறது பாஜக அரசு. மாட்டுக்கறியை எப்படி இஸ்லாமியர்கள் மட்டுமே உண்பது போலவும் , எதிர்ப்பது போலவும் பிம்பத்தை ஏற்படுத்தி கலவரங்களை அரங்கேற்றினார்களோ அதே போல் பொது சிவில் சட்டம் என்பதை இஸ்லாமியர்கள் மட்டும் எதிர்ப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கும் வேலையை மீடியாக்களின் தயவோடு செய்து தங்கள் கொள்கைகளை திணிக்கிறார்கள். மொத்தத்தில் பொது சிவில் சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது...