வியாழன், 20 அக்டோபர், 2016

இஸ்லாமியர்களின் நோன்பு கஞ்சியை இழிவுபடுத்திய பாஜக தலைவர் தமிழிசை!

tamilisai1_2097893g
சென்னை: இஸ்லாமியர்களின் நோன்பு கஞ்சியை மிக மோசமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இழிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டதை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக ராமர் கோவில் பிரச்சனையை பாஜக மீண்டும் கையிலெடுப்பதாகவும் கருணாநிதி சாடியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இஸ்லாமியர்களின் நோன்புகால கஞ்சியை மிகவும் இழிவுபடுத்தியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
அந்த அறிக்கையில், ஓட்டிற்’கஞ்சி’, சில மதத்தினற்’கஞ்சி’, ‘கஞ்சி’ சாப்பிடுவது, அதுவும் முதல்-அமைச்சராக இருந்தபோது அஞ்சி, அஞ்சி, ‘கஞ்சி’ சாப்பிடச் சென்றது மதச்சார்பின்மையா? என கடுமையாக இழிவுபடுத்தியுள்ளார்.
இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு அடுத்த வரியிலேயே, ‘நான் அந்த நடைமுறையையோ மேற்கொள்ளும் மதத்தையோ விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்களையே ஏமாற்ற அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகண்டு, தான் மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்கு அவர்களின் நம்பிக்கையை இவர் பயன்படுத்துகிறார்’ எனவும் சமாளித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
இந்துத்துவா பேசும் தலைவர்கள் தங்களது பொதுக்கூட்டங்களில் இதுபோன்ற இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இப்படியான இழிவுபடுத்தும் அறிக்கைகளை இதுவரை யாரும் பகிரங்கமாக அவர்கள் வெளியிட்டதில்லை.