ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஏடிஎம் இயந்திரங்களில் கள்ள நோட்டுகள் வந்தால் என்ன செய்வது?

ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கள்ளநோட்டுகள் வந்ததாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் கூட இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர் வங்கி ஊழியர் என்பதால் கள்ளநோட்டுகள் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்ததால், அந்த விவகாரத்தை எளிதில் கையாண்டதையும் நாம் அறிந்து கொள்ளலாம். சென்னை மட்டுமல்ல நாட்டின் மற்ற மெட்ரோ நகரங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், ஏடிஎம் மையங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.
கள்ளநோட்டுகளைத் தடுக்க வங்கிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?:
கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுக்க ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பணம் பெறும்போது அதனை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, கள்ளநோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களையும் வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன.
வங்கிகளிடமிருந்து ஏடிஎம் மையங்களுக்கு பணத்தினை எடுத்துச் செல்லும் பாதுகாப்பு நிறுவனங்களும் கள்ள நோட்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கின்றன. இதையும் தாண்டி, நவீன தொழில்நுட்பம் மூலம் கள்ளநோட்டுகளைக் கண்டறியும் வசதியும் சமீபத்திய வரவு ஏடிஎம் இயந்திரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் பல ஆண்டுகள் பழமையானதாக இருப்பது குறையே.
வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கள்ள நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுக்கப்படும் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டால், அதை ஏடிஎம் மையங்களில் இருக்கும் கண்காணிப்புக் கேமிராக்கள் முன் காட்டலாம்.
கேமிராக்கள் செயல்படாத சூழலில், ஏடிஎம் மையத்தின் காவலாளியிடம் இதுகுறித்து புகார் அளிக்கலாம். ஆனால், கள்ளநோட்டுகளுடன் எடிஎம் மையத்தை விட்டு வெளியே வந்துவிட்டால், அந்த நோட்டுகள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பெறப்பட்டதே என்பதை நிரூபிப்பது மிகுந்த சிரமம் என்றே சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.