திங்கள், 17 அக்டோபர், 2016

70 லட்சம் வேலைவாய்ப்புகள் மறையும் அபாயம்: எச்சரிக்கை மணியடிக்கும் ஆய்வு

Wheat harvesting

இந்தியாவில் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் மறையும் அபாயம் இருப்பதாக சமூக அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் இருந்து செயல்படும் பிரஹார் எனும் அமைப்பு, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 550 வேலைவாய்ப்புகள் மறைந்துவருவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டில் புதிதாக 1.35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதேசமயம் இந்த எண்ணிக்கை கடந்த 2013-ல் 4.19 லட்சமாகவும், 2011ஆம் ஆண்டில் 9 லட்சமாகவும் இருந்ததாகவும் பிரஹார் அமைப்பு நினைவுபடுத்தியுள்ளது.
நாட்டின் இன்றைய சூழலில் விவசாயிகள், பெட்டிக்கடைகள் வைத்து நடத்தும் குறு வணிகர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகிய துறைகளில் பணிபுரிவோரின் வாழ்வாதரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இத்தகைய சூழலுக்குக் காரணம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அளிக்கும் விவசாயத் துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை மிகமோசமான பாதிப்புக்குள்ளாகியிருப்பதே என்றும் பிரஹார் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த வேலைவாய்ப்புகளில் 50 சதவீத வேலைவாய்ப்பினை விவசாயத் துறையும், 40 சதவீத வேலைவாய்ப்பினை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.