வியாழன், 16 மார்ச், 2017

5 மாநில தேர்தல் முடிவுகளின் எதிரொலி; விடுமுறைக்குப் பின்னர் அபார ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை!

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்த நிலையில், 3 நாள் விடுமுறைக்குப் பின்னர் பங்குச் சந்தைகள் அபார உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, 325 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கோவா மற்றும் மணிப்பூரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 4 மாநிலங்களில் ஆட்சியமைக்கு வாய்ப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக கடந்த 10ம் தேதி முடிவடைந்த இந்திய பங்குச் சந்தைகள், வார விடுமுறை மற்றும் ஹோலி விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 29 ஆயிரத்து 487 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 9 ஆயிரத்து 134 புள்ளிகள் வரை அதிகரித்தது