திங்கள், 5 ஏப்ரல், 2021

பிஜாப்பூர் மாவோ தாக்குதல்; 22 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்

 சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், 22 வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். நேற்று நடைபெற்ற மோதலில், 22 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், 17 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. இன்று 5 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாதுகாப்பு படை வீரரை காணவில்லை.

நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக சத்தீஷ்கரின் தாண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி, நக்ஸ்ல், மாவோயிஸ்ட் தாக்குதல்கள் நிகழ்வது வழக்கம். நக்ஸலைட்டுகளின் பல்வேறு சதித் திட்டங்களை பாதுகாப்பு படை தகர்த்துள்ளது. இந்நிலையில், நேற்று, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் சிலர், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும், ஒரு வீரரை காணவில்லை எனவும் பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான மாவோயிஸ்டுகளில் ஒருவரான, பட்டாலியன் நம்பர் 1 ஏரியா கமண்டர் ஹிட்மா தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பங்குப் பெற்றுவிட்டு திரும்புவதற்காக பதுக்கியிருந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுவுடன் பேசினார். தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடங்களில் தற்போதைய கள நிலவரத்தை கேட்டறிந்த பின், நிலைமையை மதிப்பிடுவதற்காக களத்திற்கு செல்லுமாறு, சிஆர்பிஎப் இயக்குநர் ஜென்ரல் குல்தீப் சிங்குக்கு உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதலை கண்டித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமித் ஷா, தீவிரவாதிகளுடன் போராடி நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அற்பணித்துள்ள பாதுகாப்பு படையினர் வீரம், ஒரு போதும் மறக்கப்படாது என தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலை கண்டித்து ட்விட் செய்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த தேசம் அவர்களின் வலியை தாக்கிக் கொள்வதாக, தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயமானன் வீரரை கண்டுபிடிக்க தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ட்விட் செய்துள்ளார்.

source : https://tamil.indianexpress.com/india/chhattisgarh-maoist-attack-encounter-bijapur-sukma-28853/

Related Posts: