செவ்வாய், 6 ஏப்ரல், 2021

தமிழக வரலாற்றில் இது மிக முக்கியமான தேர்தல்; வெற்றியும் எதிர்காலமும் யார் பக்கம்?

 தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் வாக்குகளை காலையிலேயே அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏன்?

முக ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும்

தமிழக அரசியல் வரலாற்றை இவர்கள் இருவரும் இல்லாமல் எழுதியிருக்க முடியாது என்று தோன்றும் ஜாம்பவான்களான முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா என இருவரும் இன்றி நடைபெறும் தேர்தல். கலைஞரின் இறப்பிற்கு பிறகு திமுகவின் அதிகார மாற்றம் ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இன்றி முக ஸ்டாலின் கைக்கு வந்தது. 2014 பொதுத்தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுகவை 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த தலைவராக ஸ்டாலின் உருமாற்றம் அடைந்திருக்கிறார்.


ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவிற்குள் பெரும் பூசல்களும் குழப்பங்களும் வந்தாலும் கூட, சிலர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட 4 ஆண்டுகள் தமிழக அரசியலில் நீடித்து இருந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசியல் வாரிசுகளாக உருப்பெற்றிருக்கும் இவ்விரண்டு தலைவர்களுக்கும் நிச்சயமாக இந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.


பாஜகவும் – திமுகவின் கடுமையான நிலைப்பாடும்

இரண்டு பிராந்திய கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினையும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அடிப்படையிலும், நிர்வாக குறைபாடுகளை முன்வைத்துமே போட்டியிட்டு வந்தன. பாஜகவின் முகமாக அதிமுக மாறி வருகின்றது என்ற காரணத்தால் தான் வேறெப்போதும் இல்லாத வகையில் அதிமுகவை எதிர்க்கின்றோம் என்ற கடுமையான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளது. அதிமுகவின் அடையாளத்தோடு பயணித்திருக்கும் பாஜக 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் கூட, இந்த தேர்தலே சட்டமன்றத்திற்குள் பாஜக அடி எடுத்து வைக்க அடித்தளமாக அமையும் தேர்தலாக இருக்கும்.

பல்முனை போட்டியாக மாறுமா 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி மற்றும் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓரளவிற்கு இருந்த அரசியல்மட்ட அதிர்வுகள் குறைந்தன. இருப்பினும் கூட திமுக, அதிமுக என்ற பெரும் கட்சிகளுடன் போதும் அளவு பலத்துடன் மோத அமமுக, மக்கள் நீதி மய்யம், மற்றும் நாம் தமிழர் கட்சி களம் இறங்கியுள்ளன. பெரிய போட்டியாளர்களாக இவர்களை மக்கள் இன்னும் அறிந்து கொள்ளாத நிலையிலும் கூட, சில மிக முக்கிய தொகுதிகளில் இவர்களின் வெற்றிகளோ அல்லது இவர்களுக்கு கிடைக்கும் வாக்குகளோ தேர்தலின் போக்கையே மாற்றலாம். இறுதி வரை தேர்தல் அறிக்கையே வெளியிடாமல் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் கூட இந்த தேர்தலை மிக முக்கியமானதாக காட்டுகிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்திற்கான தேர்தல்கள் கடந்த ஆண்டு நடைபெற்றது. அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு முக்கிய சுகாதார முடிவுகளை மேற்கொண்டு பிறகு இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முகக்கவசம கட்டாயம் தேவை. உங்களுக்கு கையுறைகள் வழங்கப்படும். முழுமையான பாதுகாப்போடு நீங்கள் வாக்களிக்க செல்லலாம். அது மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதலாக மாலையில் ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வயதானவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர இலவச வாகன ஏற்பாடுகளும் இம்முறை செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லாமலும் இம்முறை வாக்களிக்க வாக்களர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts: