தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் குற்றம் சாட்டிய நாம் தமிழர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் குதித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப்பும், திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இதில் நாம் தமிழர் கட்சியின் அப்துல் வகாப்பும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.
இந்த நிலையில், வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்கள் வாக்குச் செலுத்த செல்லும் முன் பணம் வழங்குவதற்காக டோக்கன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி டோக்கன் வழங்கிய சிலரை பிடித்த காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததால், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகிய இருவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தால் போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோக செய்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2021-kovai-south-constituency-vanathi-srinivasans-aide-distributes-money-to-voters-289381/