உத்தரபிரதேசத்தில் பாலியல் வழக்கில் நீதிக்காக போராடியதால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தம்மை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் தாமதமாக கடந்த மார்ச் மாதம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு புறப்பட்டுச்சென்றார். அப்போது வழிமறித்த சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்ளிட்ட 5 பேர் அப்பெண்ணை தீ வைத்து கொளுத்தினர். 90 சதவிகிதம் தீக்காயம் அடைந்த இளம்பெண்ணுக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இச்சம்பத்தில் தொடர்புடைய ஐந்து பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நீதி கேட்டு போராடிய இளம்பெண் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv