Seven more top athletes accuse TN coach of abuse : சென்னை காவல் நிலையத்தில் புகழ்பெற்ற தடக பயிற்சியாளர் பி.நாகராஜன் மீது 19 வயது தேசிய அளவிலான ஓட்டப்பந்தய வீரர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மேலும் ஏழு பெண் விளையாட்டு வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பலர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்த அனைத்து பெண்களும் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள். பாலியல் ரீதியிலாக பல ஆண்டுகள் துன்புறுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். புகார் அளித்தவர்களில் சிலர் நீண்ட கால ஓய்வில் உள்ளனர். பயிற்சியாளர்களாக பலருக்கு பயிற்சி அளித்து பதக்கம் வெல்ல வைத்து பெருமை சேர்த்திருக்கிறார் நாகராஜன். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மாஜிஸ்திரேட் முன் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் நாகராஜன். அவர் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவரை போக்சோ மற்றும் இதர ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகராஜனின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு மேலும் ஏழு புதிய புகார்கள் வந்துள்ளன என்று டி.சி.பி. மகேஷ்வரன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இந்த புகார்களில் ஒன்று 2005ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை குறிப்பிட்டுள்ளது என்று கூறிய அவர், இது தொடர்பாக விசாரணையின் போது மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சிறப்பு காவல்படையின் டி.சி.பி. எச். ஜெயலட்சுமி, ஒவ்வொரு புகாரும் குற்றம் சாட்டப்பட்டவரின் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறினார். நாகராஜனுக்கு எதிராக குண்டர் சட்டத்தையும் காவல்துறையினர் கோரியுள்ளனர், இது ஒரு திருத்தத்துடன் மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உதவும்.
நாகராஜன் மனைவி க்ரேஸ் ஹெலினா இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பயிற்சியாளருக்கு எதிரான முதல் குற்றச்சாட்டுகள் அரசியல் ஆய்வாளரும் விளையாட்டு வர்ணனையாளருமான டி என் ரகு மே 26 அன்று செய்த ட்வீட்டில் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை மறைத்து, அந்த ட்வீட்டில் முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்திருந்தார்.
ட்வீட்டின் அடிப்படையில் 19 வயது வீராங்கனையை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நாகராஜனிடம் 2013 முதல் 2020 வரை பயிற்சி பெற்ற போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறிய அவர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க முன்வந்தார்.
பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நேரத்தில் வெளியிடப்பட்ட அவரது புகாரின் விவரங்களை வழங்கிய காவல்துறையினர் அறிக்கையில், 2013ம் ஆண்டு முதல் மற்ற சிறுமிகளுடன் புகார் அளித்த பெண்ணும் பயிற்சி பெற்று வந்தார். பல நேரங்களில், பயிற்சிக்கு பிறகு மற்ற பெண்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய அவர், அவளை ஒரு சிறிய அறைக்குள் அழைத்து சென்று அவர் பிசியோதெரப்பி தருவதாக கூறி தகாத முறையில் அவரை அணுகியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கெஞ்சியும், எதிர்த்தும் செயல்பட்ட போது, அந்த பெண் ஒத்துழைத்தால் தான் தடகள போட்டிகளில் வெற்றி பெற அவர் உதவுவார் என்று கூறியுள்ளார். மற்ற பெண்களுக்கும் இது நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த பெண் ஒத்துழைக்காவிட்டால் அவருக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்தி அவருடைய விளையாட்டு வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவதாகவும், அப்பெண்ணையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும் கொன்றுவிடுவதாகவும் நாகராஜ் மிரட்டியுள்ளார். மன அழுத்தம் அதிகரித்த நிலையிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து யாரிடமும் குறிப்பிடவில்லை. பிறகு அவர் மற்றொரு பயிற்சியாளரிடம் பயிற்சிகள் மேற்கொள்ளா சென்றுவிட்டார்.
விசாரணை அதிகாரியின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை போலீசார் விளம்பரப்படுத்திய பின்னர் மற்ற பெண்களும் முன்வந்து தங்களின் புகார்களை பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஜூனியர் பிரிவுகளில் பங்கேற்ற, புகார் அளித்த 7 வீராங்கனைகளில் ஒருவரிடம் பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ். நாகராஜன் தனது 13 வயதில் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார் என்றும் இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நீடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தற்கொலை எண்ணங்கள் அதிகரித்தாகவும் அடிக்கடி பதட்ட நிலையில் இருந்ததாகவும் கூறினார்.
“நான் 8 ஆம் வகுப்பில் இருந்தபோது, எனது நீளம் தாண்டுதல் நுட்பத்தை மேம்படுத்த விரும்புவதாக நாகராஜன் கூறினார். எல்லோருக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னால் வரச் சொன்னார். எனவே எல்லோரும் மாலை 4 மணிக்கு அங்கு வந்தால், நான் 3 மணிக்கு வருவேன். நான் நடந்துகொண்டிருப்பதைப் போல செயல்பட அவர் 4 மணியளவில் கூறுவார். எனக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதாகவும் மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் எனக்கு தோன்றியது. நான் அந்த குழுவில் இருந்தேன். மேலும் என்னுடைய நண்பர்களை நான் இழக்க விரும்பவில்லை.
அப்படியான நாட்களில் தான் எனக்கு தொந்தரவுகளை தந்தார். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. மிகவும் அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. என்னால் அதில் இருந்து வெளியேற இயலவில்லை. இப்போது நான் எனது 30 வயதில் இருக்கிறேன், ஆனால் எனது 13 வயது சுயத்தை பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கிறேன்… அது 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது.
பெங்களூரில் நடைபெற்ற சம்பவத்தினால் உருக்குலைந்த அவர் இறுதியாக வேறொரு பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற முடிவு செய்து நாகராஜனிடமிருந்து நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் பெற்ற பிறகு மற்றொரு டிராக் அண்ட் ஃபீல்ட் கிளப்பில் சேர்ந்தார். இறுதியாக இது குறித்து நாகராஜனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மன்னிப்பு கேட்டார். புதிய கிளப்பில் நாகராஜனின் துஷ்பிரயோகம் தொடர்பான மற்ற விபரங்களை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் மட்டும் தான் பாதிக்கப்பட்டிருந்தேன். அது என்னுடன் முடியட்டும் என்று நினைத்த என்னுடைய எண்ணங்கள் தகர்ந்தன என்று அவர் கூறினார்.
அது சமூக வலைதளங்களுக்கு முந்தைய காலம். என்னால் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். குறைந்தபட்சம் என்னுடைய பெற்றோர்களிடமாவது கூறியிருக்கலாம் அல்லது உதவி மையத்தை நாடியிருக்கலாம். கிராமத்தில் இருந்து வரும் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக விழிப்புணர்வு இருந்தும் தைரியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அந்த பெண்களை நினைத்து நான் மேலும் வருந்துகிறேன் என்றார்.
நகராஜன் மேலும் பல வழக்குகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கும் அந்த வீராங்கனைக்கு இதன் மூலம் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறார். “அவரை இறுதியாக பிடித்துவிட்டோம். இதற்கு அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் இதுவரை நடந்தது அவருடைய முகத்திரையை கிழித்துள்ளது. தன்னுடைய வாழ்நாளில் இனி வேறொரு பெண்ணை அவர் தொடமாட்டார் என்று நான் இப்போது எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/seven-more-top-athletes-accuse-tn-coach-of-abuse-going-back-years-321915/