வியாழன், 3 மார்ச், 2022

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக தட்டித் தூக்கிய மம்தா

 2 3 2022 

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 இடங்களை கைப்பற்றிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தல், அடுத்துவந்த இடைத்தேர்தல், கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் என தொடர்ச்சியாக வெற்றி முத்திரையை பதிவு செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி, பெரும்பான்மையான முனிசிபாலிட்டி வார்டுகளை வென்று உள்ளாட்சியிலும் தனது பலத்தை வலுப்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற 102 நகராட்சிகளில் 31 நகராட்சிகளில் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் நகராட்சியில் இடது முன்னணி வெற்றி பெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜகவால், நகராட்சி தேர்தலில் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரசும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுவராஸ்யமாக, புதிதாக உருவாக்கப்பட்ட ஹம்ரோ கட்சி டார்ஜிலிங் நகராட்சியில் வெற்றி பெற்றது.

மகத்தான வெற்றிக்கு பின் ட்வீட் செய்த மம்தா, ” உள்ளாட்சித் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி நமது பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கட்டும். மாநிலத்தின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம். ஜெய் பங்களா! என குறிப்பிட்டிருந்தார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டாங்கா, ஹூக்ளி மாவட்டத்தில் சம்ப்தானி, புருலியா மாவட்டத்தில் ஜல்டா மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா ஆகிய நான்கு நகராட்சிகளில் பெரும்பான்மையை கணக்கிட முடியாத வகையில் தொங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மிட்னாபூரில் காண்டாய் நகராட்சியில் டிஎம்சி அதன் முன்னாள் தலைவர் சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு மாறிய போதிலும், அங்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், அரசியலில் புதிதாக கால்பதித்த ஹம்ரோ கட்சி டார்ஜிலிங் நகராட்சியை வென்றது. மாநிலத்தின் மற்ற இடங்களைப் போலல்லாமல், டார்ஜிலிங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குப்பதிவின் போது எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை.

டார்ஜிலிங்கில் உள்ள பிரபல உணவகத்தின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான அஜய் எட்வர்ட், கடந்த ஆண்டு நவம்பரில் ஹம்ரோ கட்சியைத் தொடங்கினார். இது மலையக வாக்காளர்களுக்கு புதிய வாய்ப்பை அளித்தது.

ஜிஜேஎம், ஜிஎன்எல்எஃப் போலல்லாமல், புதிய கட்சி டிஎம்சி அல்லது பாஜகவுடன் இணையவில்லை. தகவலின்படி, டார்ஜிலிங் குடிமை வாரியத்தில் மொத்தமுள்ள 32 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.

source https://tamil.indianexpress.com/india/west-bengal-civic-polls-trinamool-congress-victory-419496/