வெள்ளி, 18 மார்ச், 2022

பரா அத் இரவு உண்டா ?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!


பரா அத் இரவு உண்டா ?


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : எனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடுகள் அனைத்தும் நாகில் கொண்டு போய் சேர்க்கும் ( நூல் : நஸாயி - 1560 ) 


மார்க்கம் என்ற பெயராலும் , நன்மைகள் என்ற பெயராலும் , ஏதேதோ காரியங்களையும்,

வணக்கங்களையும் தன் மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் இரவில் செய்வதை சிறந்த அமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர் .


அந்த செயல்கள் யாவும் பாதுகாக்கப்பட்ட இறை வேதம் திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லி உள்ளானா ? அல்லது நபி ( ஸல் ) அவர்கள் செயல்படுத்தினார்களா ? என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் கடமை என்று எண்ணி சில காரியங்களை செய்து வருகின்றனர் .


அப்படிபட்ட ஒரு காரியங்களில் ஒன்று தான் ஷாபான் மாதம் 15 - ம் நாள் கொண்டாடப்படும் பராஅத் இரவு ஆகும் .


ஷபான் பிறை 15 - ம் நாள் இவை பராஅத் இரவு என்று பெயரிட்டு அந்த இரவில் பல்வேறு வணக்கங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர் . பள்ளிவாசல்களிலும் , வீடுகளிலும் யாஸீன் அத்தியாயத்தை மூன்று தடவை ஓதுவார்கள் .


முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காக இரண்டாவது யாஸீன் கப்ராளிக்கு ஹதியாவாகவும் , நீண்ட ஆயுளுக்காகவும் மூன்றாவது யாஸீன் பரகத் கிடைக்க வேண்டியும் , ஆக் மொத்தம் மூன்று யாஸீன் ஒதப்படும் இது தவிர வீடுகள் தோறும் பாத்திஹாவும் ஓதப்படும் .


அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும் . எத்தனை ரக்அத்கள் தெரியுமா ? 100 ரக்அத்களாம் . வேறு சில ஊர்களில் இதைவிட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு .


பராஅத் இரவு என்ற பெயரில் நோன்பும் நோற்கிறார்கள் இதற்கும் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.


பராஅத் இரவுக்கு அதற்கான வணக்கங்களும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தவறான விளக்கங்களை பலவீனமான , இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் .


இதை நாம் எடுத்துக்காட்டி உள்ளோம் . சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும் . 


பராஅத் இரவு உண்மை தான் என்று திருக்குர்ஆனில் இவர்கள் காட்டிய ஆதாரங்கள் இவர்களுக்கு எதிராகவே உள்ளது .


தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக ! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம் . நாம் எச்சரிக்கை செய்வோராவோம் . அதில் தான் உறுதியான காரியங்கள்  யாவும் பிரிக்கப்படுகின்றன . 

( அல்குர்ஆன் - 44 : 2,3,4 ) 


இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள , பாக்கியமுள்ள இரவு , பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம் . திருக்குர்ஆனைப் பொறுத்தவரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும் .


அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமள்ள இரவு எது ? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ள .


மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் . ( அல்குர்ஆன் - 97 - 1 ) 


அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான் . அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகிறது .


இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது . ( அது ) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் . நேர்வழியைத் தெளிவாக கூறும் . ( பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும் . எங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் . ( அல்குர்ஆன் - 2 : 185 ). 


இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிதே தவிர . ஷஅபான் மாதத்தின் 15 - ம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது . எனவே , பராஅத் இரவுக்கும் , இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை . 


ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்துவிட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள் . அந்த பகலில் நோன்பு பிடியுங்கள் . அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து , பாவ மன்னிப்புத் தேடுவோர் உண்டா ? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன் . சோதனைக்கு ஆளானோர் உண்டா ? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரைகூறிக் கொண்டே இருக்கிறான் என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : அலீ ( ரலி ) நூல் : இப்னுமாஜா 1378

இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல . 


இப்னு அபீ ஸப்ர என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது . இவரது இயற்பெயர் அபு பக்ர் பின் அப்துல்லாஹ ் பின் மஹம்மது அபி புஸ்ரா ஆகும் . 


இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறியுள்ளார்கள் . 


புகாரீ அவர்கள் இந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள் . 


அபூபக்கர் என்பார் பலவீனமானவர் என்று நஸாயி அவர்கள் அல்லு அஃபாஉ வல்மத்ருகீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் . இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் இந்த ஹதீஸ் பொய்யான ஹதீஸாகும் . 


பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதைரப்பூர்வமானவை அல்ல . எனவே , இவர்கள் புதுமையான காரியத்தை உருவாக்கியுள்ளார்கள் . இவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தையும் , நபிமொழிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .


உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுக்கிறீர்களா ? ( அல்குர்ஆன் - 49 : 16 ) -


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ , அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும் . ( அறிவிப்பாளர் : ஆயிஷா ( ரலி ) நூல் : புகாரீ - 2697 ) :


எனவே , இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . அதில் கூட்டவோ - குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை . அக்கடி அல்லாஹ்வுக்கும், அவனது தூதரும் காட்டித்தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி , அதைச் செய்தவர் நரகத்தில் புகுவார் . இது நபிகளாரின் எச்சரிக்கையாகும். 


என்றும் மார்க்கப்பணியில் ... 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 


காஞ்சிபுரம் மாவட்டம்

மாங்காடு கிளை