17 3 2022
உக்ரைனில் மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு வார்டுகளில் தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதினை, போர் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால், ஒருவரை போர் குற்றவாளி என கூறுவது எளிதானது அல்ல. அதனை தீர்மானிக்கவும், அவர்கள் எப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு, தனி வரையறைகள் உள்ளன.
இருப்பினும், புதினை போர் குற்றவாளி என கூறுவதை வெள்ளை மாளிகை தவிர்த்து வந்தது. அதற்கு விசாரணை மற்றும் சர்வதேச உறுதிப்பாடு தேவை என கூறிவந்தது. ஆனால், ஜோ பைடன் அந்த வார்த்தையை உபயோகித்துள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், அவர் இதயத்திலிருந்து பேசுகிறார். முறையான தீர்மானத்தை எடுப்பதற்கான ஒரு செயல்முறை உள்ளது என்றார்.
லைபீரிய முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லரை விசாரணை செய்த சியரா லியோனுக்கான ஐ.நா சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய டேவிட் கிரேன் கூறுகையில், புடின் நிச்சயம் ஒரு போர்க்குற்றவாளி ஆனால், அதிபர் அரசியல் ரீதியாக இதைப் பற்றி பேசுகிறார் என்றார்.
புதினின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒரு விசாரணைக் குழுவை நிறுவுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அமெரிக்காவும் மற்ற 44 நாடுகளும் இணைந்து சாத்தியமான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அதேசமயம், நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கிரேன், தற்போது உலகளாவிய பொறுப்புக்கூறல் நெட்வொர்க்கிற்கு தலைமை தாங்குகிறார். இது, சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு தொடங்கிய நாள் முதல், புதினின் குற்றங்களுக்கான குற்றவியல் தகவல்களைத் தொகுக்கும் பணிக்குழுவை கிரேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், புதினுக்கு எதிராக ஒரு மாதிரி குற்றச்சாட்டையும் உருவாக்கி வருகின்றனர். புதின் மீதான குற்றச்சாட்டு ஒரு வருடத்திற்குள் முடிவு செய்யப்படலாம். ஆனால் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றார்.
போர்க் குற்றவாளி யார்?
போர்க் குற்றவாளி என்கிற வார்த்தை, ஆயுத மோதலின் சட்டம் எனப்படும் உலகத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் தொகுப்பை மீறும் எவருக்கும் பொருந்தும். போர் காலங்களில் நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விதிகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜெனிவா உடன்படிக்கைகளும், பின்னர் சேர்க்கப்பட்ட நெறிமுறைகளிலின்படி, அந்த விதிகள் மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன.
இந்த விதியின் நோக்கம் போரில் பங்கேற்காத மக்களைப் பாதுகாப்பதும், மருத்துவர்கள், செவிலியர்கள், காயமடைந்த வீரர்கள், போர்க் கைதிகள் உட்பட போர் புரிய முடியாத நபர்களை பாதுகாப்பதும் தான். ரசாயன அல்லது பயோலாஜிக்கல் ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த குறிப்பிட்ட குற்றம் ஒருவரை போர் குற்றவாளியாக கருதப்படுகிறது?
வேண்டுமென்றே கொலை, பேரழிவு ஏற்படுத்தல், ராணுவத் தேவையால் நியாயப்படுத்தப்படாத சொத்துக்களை கையகப்படுத்துதல் போன்ற டுமையான மீறல்கள் போர்க் குற்றங்களாக கருதப்படுகிறது. அதில், பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்தல், அதிகமான பலத்தை பயன்படுத்துதல், மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துதல், மக்களை பணயக்கைதிகளைப் பிடித்தல் ஆகிய குற்றங்கள் அடங்கும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், எந்தவொரு குடிமக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலில் பின்னணியில் உள்ள மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும்.
இதில் கொலை, நாசம் செய்வது, வலுக்கட்டாயமாக இடமாற்றம், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை, பாலியல் ரீதியாக அடிமையாக வைத்தல் ஆகியவையும் அடங்கும்.
நீதி கிடைப்பதற்கான வழி?
பொதுவாக, போர்க்குற்றங்களை விசாரித்துத் தீர்மானிப்பதற்கு நான்கு வழிகள் உள்ளன, இருப்பினும் ஒவ்வொன்றுக்கும் வரம்புகள் உள்ளன. அதில் ஒன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக அடைவது ஆகும்.
இரண்டாவது விருப்பமானது, புதின் மீது வழக்குத் தொடர, ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழுவின் பணியை ஒரு கலப்பு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அமெரிக்கா மாற்றினால் உண்டு.
மூன்றாவதாக, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து, புடினை விசாரிக்க ஒரு நீதிமன்ற அமர்வு அல்லது நீதிமன்றத்தையோ உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நாஜி தலைவர்களுக்கு எதிராக நியூரம்பெர்க்கில் ராணுவ தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டது.
இறுதியாக, சில நாடுகள் போர்க் குற்றங்களை விசாரிக்க தங்கள் சொந்த சட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஜெர்மனி ஏற்கனவே புடினை விசாரணை செய்து வருகிறது. அமெரிக்காவில் அத்தகைய சட்டம் இல்லை, ஆனால் சர்வதேச இனப்படுகொலை, சித்திரவதை, குழந்தைப் படையினரை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல் உள்ளிட்ட செயல்களில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்புப் பிரிவை நீதித்துறை கொண்டுள்ளது.
புதினை எங்கு விசாரிக்கலாம்?
அதுதொடர்பான தகவல் தெளிவாக இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால், நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தின் தலைமையகத்திற்கு எந்த சந்தேக நபர்களையும் வரவழைக்க முடியாது. அமெரிக்காவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பால் புதின் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். ஆனால் அவரை அங்கு வரவழைப்பது கடினமான ஒன்றாகும்.
இதற்கு முன்பு தேசிய தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா?
1990 களின் ஆரம்ப காலத்தில் யூகோஸ்லாவியா சிதைத்து மோதல்களைத் தூண்டியதற்காக முன்னாள் யூகோஸ்லாவியத் தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிச், ஹேக்கில் உள்ள ஐ.நா. நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பு வருவதற்குள் அவர் தனது சிறையில் இறந்தார். அதேசமயம், அவரது போஸ்னிய செர்பிய கூட்டாளியான ராடோவன் கராட்சிக், போஸ்னிய செர்பிய ராணுவத் தலைவர் ஜெனரல் ரட்கோ மிலாடிக் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அண்டை நாடான சியரா லியோனில் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்ததற்காக லைபீரியாவின் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மரணமடைந்த சாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிஸ்சென் ஹப்ரே, ஆப்பிரிக்க நீதிமன்றத்தால் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அரச தலைவர் ஆவார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/explained/who-is-a-war-criminal-and-who-gets-to-decide-426332/