4 3 2022
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அன்னவாசல் பேரூராட்சியில் திமுக 6 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பேரூராட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. முன்னதாக, அதிமுக உறுப்பினர்களை, தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்க, திமுகவினர் முயற்சி செய்வதாக, அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, அதிமுக உறுப்பினர்களுக்கும், மறைமுக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுகவினர் நுழைய முயற்சி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் போலீசாருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
அண்மைச் செய்தி: புதுச்சேரி – ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்
அதிமுகவுக்கு சாதகமாக போலீசார் செயல்படுவதாகக் கூறி, திமுகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு பதற்றம் உருவானது. திடீரென போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைத்தனர். இதில், திமுக பிரமுகர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பெண் போலீசார் இரண்டு பேர் காயமடைந்தனர். தனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தார். இதற்கிடையே, அன்னவாசல் பேரூராட்சி தலைவராக பல்வேறு போராட்டங்களைத் தாண்டி அதிமுகவை சேர்ந்த சாலை பொன்னமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.