கார்கிவ்வில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்தியாவின் வெளியேற்றல் திட்டம் சவாலை எதிர்கொள்கிறது. இந்த மரணம், டெல்லியின் ராஜதந்திரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தன்னை நடுநிலையாக முன்னிறுத்திவருகிறது.
தற்போது, அங்கிருக்கும் 8 ஆயிரம் இந்தியரின் பாதுகாப்பு அவசர கவலைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கும் கிழக்கு உக்ரைனில் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், வெளியேற்றல் பணி இந்தியாவுக்கு சவாலாக மாறியுள்ளது.
முதலில் இந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால், இந்திய தூதர்களையும் வெளியேற்ற இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஏனென்றால், நகரில் நிலைமை மோசமடைந்தால், குண்டு எங்கு விழும் என்பதை கணிப்பது கடினம்.
இதற்கிடையில், வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ரஷ்யா மற்றும் உக்ரைனின் தூதர்களை அழைத்து, கார்கிவ் மற்றும் பிற மோதல் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை அவசரமாகப் பாதுகாப்பாக அனுப்புவதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அதேபோல், ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதர்களும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.
கார்கிவ்வில் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா, உக்ரைன் தூதர்களை தொடர்புக்கொண்டு இந்தியா பல முறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தரப்பை பொறுத்தவரை, மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் சில காலமாக நடைபெற்று வருகின்றன.
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்திய குழு தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், கார்கிவ் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் மோதல் சூழ்நிலை தடையாக உள்ளது.
கார்கிவ் நகரம், ரஷ்யா எல்லையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. எனவே, பாதுகாப்பான பாதையை முடிவு செய்ய ரஷ்யாவும், உக்ரைனும் உடனே பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது, இந்தியாவின் ராஜதந்திரத்தை சிக்கலாக்குகிறது. போரில் நடுநிலையை இந்தியா முன்னிறுத்தியுள்ளதால், மோதல் பகுதிகளிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உள்ளது.
வெளியேற்றும் செயல்முறை குறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரிடம் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பினார்.
இதுதவிர, அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக் குடியரசுத் தலைவர்களிடமும் பேசி வருகிறார். மேலும் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் பேசிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடனும் மோடி பேசினார்.
போர் நடைபெறாத இடத்திலிருந்து, இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 12 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியே வந்துள்ளனர். கணிசமானவர்கள் தற்போது பாதுகாப்பான பகுதிகளில் உள்ளனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அனைவரும் திரும்புவதை உறுதிசெய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என இந்திய அரசு கூறியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/explained/why-student-death-challenges-indian-evacuation-419179/