வியாழன், 3 மார்ச், 2022

நீட்டில் பெயில் ஆகுறவங்கதான் வெளிநாட்டுக்கு படிக்கப் போறாங்க… மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

 2 3 2022 

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களில் 90 சதவீதம் பேர், இந்தியாவில் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வு நீட்டில் தோல்வி அடைந்தவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார்கள் என்பதை விவாதிக்க இது நேரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த அதே நாளில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் இப்படி பேசியிருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “மோடி அரசு 20 ஆயிரம் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு, பொறுப்பை புறக்கணித்தது மட்டுமின்றி உக்ரைன் சென்ற இந்திய மாணவர்களிடையே தவறுகளைக் கண்டறிந்து வருகிறது. இது சங்கடமாக இருக்கிறது. அவர் மாணவர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவஜோதி பட்நாயக்கும் அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஜோஷி ஜி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவுக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உரிமை இல்லாததற்கு இதுதான் காரணம் என்று சொல்கிறீர்களா” என கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகமான மருத்துவர்களை உருவாக்கிட தனியார் துறை தனது பங்களிப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அவர் கூறுகையில், “நம் மாணவர்கள் மருத்துவ கல்வி பயில சிறு நாடுகளுக்கு செல்கிறார்கள். மொழித் தடையையும் மீறி பயணிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான ரூபாய் நம் நாட்டை விட்டு வெளியே செல்கிறது. தனியாரால் இந்த துறையில் பெரியளவில் நுழைய முடியாதா? இந்தியா அதிகபட்ச மருத்துவர்களை உருவாக்கும் வகையில் நமது மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்க முடியாதா” என கேள்வி எழுப்பினார்.

source https://tamil.indianexpress.com/india/90percent-of-indian-students-who-go-abroad-fail-neet-says-union-minister-419406/