வெள்ளி, 14 அக்டோபர், 2022

100 யூனிட் இலவச மின்சார ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு

 100 யூனிட் இலவச மின்சார மோசடிக்கு ‘செக்’: ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கும், 2.22 கோடி வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 500 யூனிட் மின்சாரம் வரை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறது.

இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் வாடகை வீட்டில் தங்கிருக்கும் குடும்பங்களுக்கு வீட்டில் உரிமையாளர்கள் சிலர் ஒரு யூனிட்டுக்கு ரூ10 கட்டண உயர்த்தி வசூலித்து வருவதாகவும், ஒரு சிலர் தங்களது வீட்டிற்கு பல மின் இணைப்புகளை பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக ஒரு சில வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனியாக மீட்டர் இருப்பதால் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிட் இலவச மின்காரம் மற்றும் 500 யூனிட்வரை மானியம் என அவர்களின் மின்கட்டணம் குறைந்து வருகிறது. இதனால் மின்வாரியத்தின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மின்கட்டண உயர்வுக்கு முன்னாள் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு தமிழக அரசு சார்பில், 3,650 கோடி மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்கட்டண உயர்வினால், இந்த மானிய கட்டம்ண 5572 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மின்சாரத்தில் முறைகேடு செய்வதை தவிர்க்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டள்ளது.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள்,  குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

ஆனால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. என்று அரசிதழலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-approved-linking-aadhar-and-electricityconnection-number-524968/