வெள்ளி, 14 அக்டோபர், 2022

ஹிஜாப் தடை வழக்கு: மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்; இரு நீதிபதிகளும் கூறியது என்ன?

 

13 10 2022

கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தவே மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள பி.யூ.கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் உள்ள மாணவிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் போராட்டத்தை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கங்கள் எழுப்ப, அதைக் கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’ என முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலம் முழுதும் பரவி இருந்த அதிர்வலை நாடு முழுதும் பரவியது. இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என்ற தடையை கர்நாடக மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிராக மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர்நீதி மன்றம் தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதி மன்றம் விசாரணை

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, ”உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது. இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்” என்று அவர் வாதிட்டார்.

அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22-ம் தேதி ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு

ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்த நிலையில், இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்று இருந்தது. அதன்படி, தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்த நிலையில், நீதிபதி சுதன்ஷு துலியா அவற்றை அனுமதித்து, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பை அறிவிக்கும் போது இரு நீதிபதிகளும் கூறியது பின்வருமாறு:

🔴 நீதிபதி ஹேமந்த் குப்தா:

“கருத்து வேறுபாடு உள்ளது. எனது உத்தரவில் நான் 11 கேள்விகளை எழுப்பியுள்ளேன். முதலில், மேல்முறையீடு அரசியலமைப்பு பெஞ்சிற்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது. கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் சீருடைக்கு குறித்து முடிவு எடுக்கலாமா மற்றும் ஹிஜாப் அணிந்து வருதைக் கட்டுப்படுத்துவது பிரிவு 25 ஐ மீறுவதாகும். பிரிவு 19 மற்றும் பிரிவு 25 இன் கீழ் சரியானதா என்பது பரஸ்பரம் பிரத்தியேகமானது.

அரசாங்க உத்தரவு அடிப்படை உரிமையை மீறுகிறதா. மாணவர் தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்த முடியுமா, இஸ்லாத்தின் கீழ், ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மதப் பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியா. கல்வியை அணுகுவதற்கான நோக்கத்திற்காக அரசாங்க உத்தரவு உதவுகிறதா: என் கருத்துப்படி பதில் மேல்முறையீட்டாளருக்கு எதிரானது.

🔴 நீதிபதி சுதன்ஷு துலியா:

“கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அரசு உத்தரவை ரத்து செய்துள்ளேன். அத்தியாவசியமான மத நடைமுறையில் ஈடுபடுவது அவசியமில்லை, நீதிமன்றம் தவறான வழியை எடுத்துள்ளது. இது தேர்வுக்கான ஒரு கேள்வி மட்டுமே. பெண் குழந்தைகளின் கல்வி எனக்கு மிகவும் முக்கியமானது.

🔴 நீதிபதி ஹேமந்த் குப்தா:

“மாறுபட்ட கருத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை இந்திய தலைமை நீதிபதியிடம் தகுந்த வழிகாட்டுதலுக்காக பரிந்துரைக்கிறோம்.”

இவ்வாறு இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/hijab-ban-case-split-verdict-by-sc-what-both-the-judges-said-tamil-news-524886/