30 09 2022
ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்கு பருவமழை காலமாக உள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில், 6 மாநிலங்களில் வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இருந்து பற்றாக்குறை நீடிக்கிறது. நேற்று (செப்டம்பர் 29) வியாழன் வரை, மணிப்பூரில் -47 சதவீதமாக மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 47 சதவீதம் குறைவாக உள்ளது. பீகார் (-31 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (-28 சதவீதம்), திரிபுரா (-24 சதவீதம்), மிசோரம் (-22 சதவீதம்) மற்றும் ஜார்க்கண்ட் (-21 சதவீதம்) ஆக மழை பதிவாகியுள்ளது. இந்த மாநிலங்களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் (ஜூன் மாதத்தில்) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இயல்பை விட குறைவாக மழை பெய்யும் என கணித்திருந்தது, அது போலவே நடந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை தவிர்த்து கணித்தது போலவே நடந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் இயல்பை விட 19 சதவீதம் அதிகம் மழை பதிவாகியுள்ளது.

இந்தோ-கங்கை சமவெளியில் இந்தாண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த பகுதிகளில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்படும். மழையை போதிய அளவு பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிலை காணப்படுகிறது.
வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், “வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் நகர்ந்து ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நோக்கிச் சென்றது. இதன் விளைவாக இந்தோ-கங்கை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மேலும், தென்மேற்கு பருவமழை தெற்கில் நீண்ட நாட்கள் நீடித்தது” என்று கூறினர்.
பசிபிக் பெருங்கடலில் தொடரும் லா நினா வழக்கத்தை விட குளிர்ச்சியான கடல் மேற்பரப்பு பருவமழை காலம் மற்றும் ஒட்டுமொத்தமாக தொடர்கிறது. இதனால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் சீரற்ற மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
பீகார் மழை நிலவரம்
1901இல் இருந்து பீகார் மாநிலம் 6-வது முறையாக இந்தாண்டு வறண்ட பருவமழையை எதிர்கொண்டது. மாநிலத்தில், மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் (89 சதவீத பரப்பளவு) இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது. அதிக மழைப்பொழிவு இல்லாத மாவட்டங்கள் பாகல்பூர் (-59 சதவீதம்), லகிசராய் (-54 சதவீதம்), சீதாமர்ஹி (-53 சதவீதம்), ஷேக்புரா மற்றும் சரண் (தலா -50 சதவீதம்) மற்றும் சஹர்சா மற்றும் கதிஹார் (தலா – 48 சதவீதம்).
உ.பி மழை நிலவரம்
2022 பருவமழை 122 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 10வது வறட்சியாக இருக்கும். மாநிலத்தின் 70 மாவட்டங்களில், 53 (70 சதவீத பகுதி) இந்த பருவத்தில் இயல்பை விட குறைவான மழையைப் பெற்றுள்ளது. கிழக்கு உ.பி.யில் அதிக அளவு வறட்சி உள்ளது. 42 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே இயல்பான அல்லது அதற்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இந்த பருவத்தில் 33 மேற்கு உ.பி. மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் இயல்பான மழை பெற்றுள்ளது.
ஜார்க்கண்டில், 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் (64 சதவீத பரப்பளவு) இந்த பருவத்தில் மழைப்பொழிவு குறைவாக பதிவாகி உள்ளது.
source https://tamil.indianexpress.com/india/southwest-monsoon-this-season-brings-below-normal-rainfall-in-6-states-518335/