வெள்ளி, 7 அக்டோபர், 2022

மாடு மீது மோதி வந்தே பாரத் விரைவு ரயில் சேதம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

 

குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்ற மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக வேகமான அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காந்தி நகரில் கடந்த ஒன்றாம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விமானத்தில் இருப்பது போன்ற வசதிகளைக்கொண்ட இந்த ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

இன்று காலை இந்த ரயில் மும்பையிலிருந்து காந்தி நகருக்குச் சென்று கொண்டிருந்தது. ரயில் பட்வா-மணி நகர் ரயில் நிலையங்களிடையே சென்றபோது. தண்டவாளத்தைக் கடந்த மாட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தால் ரயில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. விபத்துக்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் ரயிலின் முன்பகுதியில் உடைந்து தொங்கிய பகுதியை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கைரத்பூர் மற்றும் வத்வா நிலையங்களுக்கு இடையே காலை 11:20 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் என்ஜின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும், மும்பை-காந்திநகர் வழித்தடத்தில் மூன்று-நான்கு எருமைகள் திடீரென வந்தன. இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ரயிலின் பைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் இந்த விபத்தில் சேதமடைந்தது என்றும் விளக்கமளித்துள்ளார். இதனிடையே, மாடு மீது மோதி ரயிலின் முன்பகுதி சேதமடைந்த புகைப்படம் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

-இரா.நம்பிராஜன்

source https://news7tamil.live/bharat-express-train-crashes-into-cow-and-damages-photo-goes-viral-on-the-internet-accident.html