6 10 2022
பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு, இந்தியாவில் பட்டதாரி மாணவர்களுக்கு நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. SSC ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மற்றும் அதன் துணை அலுவலகங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக CGL தேர்வை நடத்துகிறது.மத்திய அரசின் கீழ் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களில் பதவியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளில் SSC மூலம் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் CGL தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என SSC அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி CGL தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை” என்று தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/cgl-exam-in-hindi-and-english-only-kanimozhi-mp.html