புதன், 12 அக்டோபர், 2022

மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்

11 10 2022

ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்விற்கு ராகுல் காந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். 

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர் உத்தரபிரதேசத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16  மணியளவில் (10 10 2022) முலாயம் சிங் யாதவ் காலமானார்.

பின்னர் முலாயம் சிங் யாதவின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜ்வாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்சிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இருப்பதால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் ஒற்றுமை நடைபயணத்தின் போது ராகுல்காந்தி முலாயம் சிங் யாதவ்விற்கு மௌன அஞ்சலி செலுத்தினார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.

source https://news7tamil.live/rahul-paid-a-silent-tribute-to-mulayam-singh-during-the-walk-of-unity.html