Rahul Gandhi | படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் தாயும், சகோதரியும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக மாநில பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டனர்.
மாண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுக்கா புவனஹள்ளி கிராமத்தில் நடந்த அணிவகுப்பில் கவுரியின் தாயார் இந்திரா லங்கேஷ் மற்றும் அவரது சகோதரி கவிதா லங்கேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் கைகோர்த்து நடந்த பிறகு, காரில் அணிவகுப்பைப் பின்தொடருமாறு இந்திராவை ராகுல் கேட்டுக் கொண்டார். பிறகு திரைப்பட இயக்குனரான கவிதா மேலும் மூன்று கி. மீட்டர் தூரம் ராகுலுடன் யாத்திரைய தொடர்ந்தார்.
பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், செப்டம்பர் 5, 2017 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தனது குற்றப்பத்திரிகையில் இந்துத்துவா ஆதரவுக் குழுவான சனாதன் சன்ஸ்தாவின் பெயரைப் பதிவு செய்துள்ளது.
கவிதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், அவர்கள் ஏன் கௌரியை படுகொலை செய்தார்கள் என்பதை ராகுல் புரிந்து கொள்ள முயன்றார் என்று கூறினார். தனது பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை ராகுல் நினைவு கூர்ந்தார். நாங்கள் இருவரும் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரை மிகவும் கொடூரமாக இழந்துவிட்டோம், என்று கவிதா கூறினார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கௌரி சத்தியத்திற்காக நின்றாள், கௌரி தைரியத்திற்காக நின்றாள், கௌரி சுதந்திரத்திற்காக நின்றாள். இந்தியாவின் உண்மையான உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவுரி லங்கேஷ் மற்றும் அவரைப் போன்ற எண்ணற்ற மற்றவர்களுக்காக நான் நிற்பேன். பாரத் ஜோடோ யாத்திரை அவர்களின் குரல். அதை ஒருபோதும் மௌனமாக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தகவல் தொடர்பு துறைக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ராகுலின் அணிவகுப்பில் கவிதா மற்றும் இந்திரா இணைந்தது குறித்து ட்வீட் செய்தார்.
கௌரி லங்கேஷைக் கொன்ற சித்தாந்தத்தை நாம் அனைவரும் அறிவோம். கௌரி லங்கேஷின் தாய் மற்றும் சகோதரியுடன் நடந்து வரும் ராகுல் காந்தி, வெறுப்பு மற்றும் வன்முறையால் உண்மையை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை உலகுக்கு எடுத்துரைக்கிறார். பாரத் ஜோடோ யாத்திரை நம்பிக்கை, அகிம்சை மற்றும் உண்மையின் சின்னம் என்று ரமேஷ் கூறினார்.
காங்கிரஸின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரை தொடர்ந்து ஏராளமான மக்களை கவர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை யாத்திரை, மாண்டியா மாவட்டத்தில், கே மல்லேனஹள்ளியில் தொடங்கி பெல்லூரில் முடிவடைந்தது.
அணிவகுப்பின் இடைவேளையின் போது, இந்திய தேசிய சட்டக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் உரையாடினார். நாட்டில் கல்வித் துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடகாவில் உள்ள கல்வி வளாகங்களில் வெடித்த ஹிஜாப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல் மற்றும் மையமயமாக்கல் ஆகியவை நாட்டில் கல்வியைப் பாதிக்கும் மூன்று முக்கிய பிரச்சனைகளாக பேராசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று காங்கிரஸின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி ராஜீவ் கவுடா, உரையாடலுக்குப் பிறகு கூறினார்.
பின்னர், பெல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், உரம், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் இப்போது 1000 ரூபாய்க்கு மேல் ஏன் விலை போகிறது என்று பெண்கள் என்னிடம் கேட்டனர். பதில் எளிது. பாஜக இப்போது ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றார்.
source https://tamil.indianexpress.com/india/bharat-jodo-yatra-rahul-gandhi-gauri-lankesh-murder-521835/