வியாழன், 10 நவம்பர், 2022

600 ஆண்டுகள் பழமையான விலைமதிப்பற்ற பாலாஜி சிலை மீட்பு;

 600 ஆண்டுகள் பழமையான விலைமதிப்பற்ற பாலாஜி சிலை மீட்பு; ஒருவர் மீது வழக்குப் பதிவு

600 ஆண்டுகள் பழமையான விலைமதிப்பற்ற பாலாஜி சிலை மீட்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன், தலைமை காவலர் பரமசிவம், சிவபாலன், மகாராஜன், காவலர் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை  குழுவினர் பழனிசாமி வசிக்கும் பகுதியில் நோட்டமிட்டதில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் நடைபெற்றதை தொடர்ந்து அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிப்படையினர் சிலையை வாங்குவது போல நாடகமாடி மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமியிடம் பேரம் பேசினர்.

பழனிசாமியோ 33 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் 15 கோடி ரூபாய்க்கு விலையை இறுதி செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட பாலாஜி சிலை

அதன்படி கடந்த 7ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சிலையை வாங்குவதற்காக மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் பழனிச்சாமிடம் சிலையை கேட்டபோது அவர் மறைத்து வைத்திருந்த 22.800 கிலோ எடையுள்ள, 58செமீ உயரமும், 31செமீ அகலமும் உள்ள சிலையை எடுத்து காண்பித்துள்ளார். இது குறித்து சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தெரிவிக்கையில்; சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு நபர்களை நோட்டமிட்டு அவர்களிடம் நைசாக பேசியதில் பழனிச்சாமி என்பவர் இந்த பாலாஜி  சிலையை விற்க முயன்றது தெரிய வந்தது.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து அந்த கோவிலை சேர்ந்த அர்ச்சகர் மூலம் இந்த சிலை விற்பனை செய்வதற்கு கடத்தப்பட்டு எடுத்து வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு எங்களது குழுவைச் சார்ந்த அதிகாரிகளை அனுப்பி வைத்து, அந்த கோவிலுக்கு சொந்தமானது தானா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகுதான் தற்போது நாங்கள் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த சிலைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடராஜர் சிலை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதேபோல் நேற்று பாலாஜி சிலை கைப்பற்றது தமிழகத்தில் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்கலிளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. க. சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/erode-600-years-old-lord-balaji-idol-recovered-538811/

Related Posts: