வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் ஆகியவற்றில் முறைகேடுகளைத் தவிர்க்க, ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்த நிலையில், ஆதார் எண் இணைக்கத் தேவையில்லாத மின் இணைப்பு வகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச மற்றும் மானிய மின் கட்டண சலுகையில் இடம்பெறும் வீடுகள், விசைத்தறி, விவசாயம், குடிசை வீடுகள் ஆகிய பிரிவினர் மட்டும், தங்களின் ‘ஆதார்’ எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.
அதே நேரத்தில், வீட்டு பிரிவு மின் கட்டணத்தில் இருந்த, ‘காமன் சர்வீஸ்’ எனப்படும் பொது சேவைக்கு, தனி மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அந்த இணைப்புக்கு, ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை மானிய விலையிலும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
மேலும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உயர் அழுத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கு சலுகை இல்லாமல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இநிலையில், மத்திய அரசு, மின்சார மானிய திட்டங்களில் முறைகேட்டை தடுக்க பயனாளிகளின், ஆதார் எண்ணை அது தொடர்பான திட்டத்துடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த அடிப்படையில், மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தமிழ்நாடு மின்சார வாரியம் நம்பவர் 15-ம் தேதி முதல் தொடங்கியது.
மேலும், ஒரே நபர், மூன்று, நான்கு மின் இணைப்பு வைத்திருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அண்மையில் அறிவித்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்பால், வீடுகளில் உள்ள பொது சேவை பிரிவுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா; வாடகைதாரர் ஆதார் இணைக்க வேண்டுமா என பல சந்தேகங்கள் மின் நுகர்வோர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
யார் யார் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மின்நுகர்வோர் மத்தியில் பொதுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மானிய திட்டங்களுக்கு மட்டும், பயனாளியின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் வீடுகள், விசைத்தறி, விவசாயம், குடிசை வீடுகள் ஆகிய நான்கு பிரிவுகளை சேர்ந்தவர்கள், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும்.
இந்த விபரம், ஆதார் எண்ணை இணைக்கும், http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நபர் எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், ஒவ்வொரு இணைப்பின் எண்ணையும் தெரிவித்து, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
பல வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘மோட்டர் பம்ப், லிப்ட்’ போன்றவற்றை உள்ளடக்கிய, ‘காமன் சர்வீஸ்’ எனப்படும் பொது சேவைக்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், அந்த பிரிவுக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் பொது சேவை பிரிவுக்கு வீட்டு கட்டணத்திற்கு மாற்றாக, ‘ஒன் டி’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, தனி கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டது. அந்த பிரிவுக்கு ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயும்; மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொது சேவைக்கு இலவச மற்றும் மானிய சலுகை கிடையாது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு, தனி நபரின் பெயரில் இருக்காது. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், பொது சேவை பிரிவு இணைப்புக்கு, ஆதார் இணைக்க வேண்டியதில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aadhaar-number-added-eb-connections-and-do-not-want-connectons-546109/