சனி, 26 நவம்பர், 2022

காசி தமிழ் சங்கமத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் சேகர்பாபு

 25 11 2022

காசி தமிழ் சங்கமத்தை ஒன்றிய அரசு தனியாக நடத்தி வருகிறது. அதற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒத்தவாடை நாடக கொட்டாய் பகுதியில் மற்றும் மண்ணடியில் உள்ள உருது பள்ளியில் இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை சட்டப்படி மீட்டு வருகிறோம். அந்தவகையில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் தொடர் முயற்சியால் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க 13,681 சதுர அடி கொண்ட நாடக கொட்டகை தொடர் சட்ட நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், எந்த துறை நன்றாக செயல்படுகிறதோ அந்த துறை மீதுதான் அதிகளவில் விமர்சனம் வரும். அதேபோல்தான் இந்து சமய அறநிலையத்துறை மீதான விமர்சனமும். இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. தர்க்கம் செய்ய வேண்டாம் எனவும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். வடமாநில ஊடகங்களும் இந்து சமய அறநிலையத்துறையைப் பாராட்டி வருகின்றனர் என்றார்.

அம்மா உணவகங்கள் எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. அம்மா உணவகத்தில் பணியாற்றுபவர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என முதலமைச்சர் கூறி உள்ளார். அம்மா உணவகத்தை மூட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியில் யாரும் அனுப்பவில்லை. காசி தமிழ் சங்கமத்திற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.

மேலும், காசி தமிழ் சங்கமத்தை ஒன்றித அரசு தனியாக நடத்தி வருகிறது. அதற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கலைநிகழ்ச்சியில் நடத்தப்பட்டன. பாரம்பரிய புறக்கணிக்காமல் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்றார்.

அத்துடன், வடமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களை வரவேற்க அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் யாரும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் ஆகம விதிகள் குறித்து கேட்டறிவது தொடர் நடவடிக்கை. நீதிமன்ற உத்தரவின் படி ஆகம விதிகள் குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் அறிக்கைப்படி முன்னிலைப்படுத்தி ஆகம விதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

source https://news7tamil.live/kashi-tamil-sangam-has-nothing-to-do-with-hindu-religious-charities-minister-shekharbabu.html