புதன், 16 நவம்பர், 2022

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் – திசை மாறி போலந்தில் விழுந்த குண்டுகள்

 16 11 2022

உக்ரைனை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், குண்டுகள் திசைமாறி சென்று போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததால், ரஷ்யா தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 10 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் உக்ரைனுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும் சட்ட விதிகளை மீறி ரஷ்யா தாக்குதலில் ஈடுபடுவதாகவும் ஐநா எச்சரித்தும், ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தவில்லை.

இந்நிலையில், கெர்சன் நகரத்தில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறியது. இதனால், தற்போதைக்கு போர் பதற்றம் இல்லை என உக்ரைன் நினைத்து கொண்டிருந்த நிலையில், நேற்று திடீரென உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணைகள் வீசி இந்த தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

ஆனால், அந்த குண்டுகள் திசைமாறி சென்று நேட்டோ கூட்டமைப்பில் உள்ள போலந்து நாட்டின் கிழக்கு பகுதியான பெர்ஸ்வுடோவில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலாந்தை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் அவசர வட்டமேசைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/russia-strikes-again-in-ukraine-bombs-fall-in-poland-redirected.html