வியாழன், 24 நவம்பர், 2022

அடுத்த ஆண்டு முதல் கல்லூரி பாடத் திட்டங்களில் மாற்றம் இருக்கும்”- அமைச்சர் பொன்முடி

 

24 11 2022

“அடுத்த ஆண்டு முதல் கல்லூரி பாடத் திட்டங்களில் பெரிய மாற்றம் இருக்கும்”- அமைச்சர் பொன்முடி

அடுத்த ஆண்டு முதல் கல்லூரி பாடத்திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  ஆய்வு கூட்டம் நடத்தினார்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,  உயர்கல்வித்துறையின் பல்வேறு துறைகளுடன் ஆய்வு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்த அறிவுத்தலின்படி இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கல்லூரிகளில் இருக்கும் பிரச்சனைகள்
தொடர்பாகவும் பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும்
விவாதித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.  மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் பொன்முடி விளக்கினார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தைப்போல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களை உருவாக்க துணைவேந்தர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.    நான் முதல்வன் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும்
வேலைப்பயிற்சியும் திறனாய்வு பயிற்சியும் கற்றுத் தரப்படும் என  அவர் கூறினார்.

அனைத்து பல்கலைக்கழங்களிலும் முதல் 4 செமஸ்டரில் தமிழ், ஆங்கிலம்  கற்று தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி,
அடுத்த ஆண்டிலிருந்து கல்லூரி பாடத்திட்டங்களில் பெரிய மாற்றம் இருக்கும் எனக் கூறினார்.  பச்சையப்பன் கல்லூரி விவகாரம் குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ
அதற்கு ஏற்ப அரசு செயல்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.


source https://news7tamil.live/minister-ponmudi-about-new-syllabus.html