வியாழன், 24 நவம்பர், 2022

தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியமிக்கப்பட்டது எப்படி?- நியமன ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

 


23 11 2022

தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியக்கப்பட்டது தொடர்பான நியமன ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழில்துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். வரும் டிசம்பர் மாதம் 31ந்தேதி வரை அவரது பணிக் காலம் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தாமாக முன்வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.  விஆர்எஸ் முறையில் ஓய்வு  பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இப்படி உடனடியாக அவருக்கு தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறைகள் சுதந்திரமானதாக இருக்கும் வகையில் அந்த நடைமுறைகளை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது அருண்கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம்  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு இந்த நியமனம் நடைபெற்றிருப்பதால்,  நியமனம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை அறிய தாங்கள் விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  அருண்கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தொடர்பான நியமன ஆவணங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SOURCE https://news7tamil.live/sc-order-to-union-govt-about-ec-arun-goel-appointment.html