செவ்வாய், 22 நவம்பர், 2022

ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

 

21 11 2022ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் மத்திய நிதி மற்றும் சட்டத்துறைச் செயலர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை இந்திய பாராளுமன்றத்தால் திருத்த முடியாது. இத்தகைய சூழல், இந்தியப் பாராளுமன்றம் அரசியலமைப்பு [103வது திருத்தம் ] சட்டம், 2019ஐ இயற்றியது.

இந்தத் திருத்தத்தின் மூலம், இந்திய நாடாளுமன்றம், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்குக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசுப் பதவிகளில் நியமனம் பெற இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு 10% வரம்பு வரையிலான சேர்க்கை மற்றும் நியமனங்களில் 10 % இட ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது . இச்சட்டம் சமூகத்தில் உயர் வகுப்பினர் பயன்பெறும் வகையில் அமைந்தது. 07.11.2022 தேதியிட்ட தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பில் உள்ள 103 திருத்தம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதன்படி , கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் அரசு நியமனங்களில் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்குக் கூடுதலாக 10% இட ஒதுக்கீட்டைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற 7,99,999 வரம்புக்குள் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆண்டு வருமானம் வருடத்திற்கு 2,50,000க்கு மேல் இருக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என உள்ளது. இது முரணாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 265வது பிரிவின்படி, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் வரி விதிக்கவோ அல்லது வசூலிக்கவோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆண்டு வருமானம்7,99,999/- லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும், ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையும் முரணாக உள்ளது. பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தும். எனவே, ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அல்லது வருமான வரி உச்ச வரம்பை ஆண்டிற்கு 8 லட்சமாக உயர்த்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு வழக்கு குறித்து மத்திய நிதி மற்றும் சட்டத்துறைச் செயலர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

source https://news7tamil.live/income-tax-on-rs-2-50-lakh-prohibition-suit.html