செவ்வாய், 29 நவம்பர், 2022

இது ஆளுனர் பதவிக்கு அழகல்ல’: ஆன்லைன் ரம்மி பிரச்னையில் மொத்தமாக சாடிய தமிழக தலைவர்கள்

 

28 11 2022

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட ஆப்களை தடை செய்து தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். இதற்கு இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநரைச் சாடியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு ஆப்களை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் மன வேதனைக்கு உள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சடத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஓப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் இன்று (நவம்பர் 28) காலாவதியானது. பலரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட ஆப்களை தடை செய்து தமிழக அரசு இயற்றியுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக தலைவர்கள் ஒட்டுமொத்தமாகச் சாடியுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி: “95 சதவீதம் மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆளுநரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையில்லை, அவர் கேள்வி கேட்டால் பதிலளிக்கும் உரிமைதான் உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. புதிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் ஆன்லைன் ரம்மி தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஏன் காலதாமதப்படுகிறார் என்பது தெரியவில்லை; அதற்கான காரணம் ஆளுநருக்குதான் தெரியும். ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் தற்போது நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின்படி முடிவுக்கு கொண்டுவருவோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் நோய் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் காலம் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்க்கு எதிரானது என கூறினார்.

மேலும், “இது துரதிருஷ்ட வசமானது. மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசாங்கம் கொண்டுவருகிற சட்டங்களை ஆளுநர் இது போல காலம் தாழ்த்தி அது காலவதி ஆகிற வரை செல்வது அவருடைய பதவிக்கு அது அழகல்ல. இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாத வண்ணம் ஆளுநர் அதை சரி செய்ய வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க-வின் கோரிக்கை” என்று டி.டி.வி தினகரன் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 33வது பலியாக ஒடிஷா மாநிலப் பெண் உயிரிழந்த நிலையில், இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/all-tamil-nadu-political-leaders-charges-governor-rn-ravi-online-rummy-ban-act-549485/