புதன், 30 நவம்பர், 2022

சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்: அரியலூரில் ஸ்டாலின் பேச்சு

 29 11 2022

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொண்டைத் தவிர மாற்று சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெருமையை கொண்ட மாவட்டம் அரியலூர்.

டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அறியலூர் என்று தெரிவித்துள்ளார். எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர் என்றவர்,

பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் என்று கூறினார்.
அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும். அரியலூர் – செந்துறை வரை ரூ.129 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதை படிம பூங்கா அமைக்கப்படும்.

போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்று தமிழகத்துக்கு வருகின்றது. தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது. கட்டணமில்லாமல் பேருந்து வசதி அளித்தன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.900 சேமிப்பு என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.என்று முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது என கூறினார்.

மேலும், அவர் தெரிவிக்கையில்; இப்போது அவர்கள் கொடுக்கும் பேட்டிகளைப் பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். உங்கள் யோக்கியதை எங்களுக்குத் தெரியுமே என்று ஏளனமாக சிரிக்கிறார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை..ஆனால் கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள். அய்யோ கெடவில்லையே என சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தமிழகம் அமைதியாக உள்ளது என்று வயிறு எரிகிறது. புலிக்கு பயந்தவன் என்மீது வந்து படுத்துக்கொள் என்று சொல்வதைப் போல சிலர் ஆபத்து ஆபத்து அலறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலருக்கு பதவி நீடிக்குமா என்று அச்சமாக உள்ளது. மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்து இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி மாவட்டம்


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-says-some-people-doing-conspiration-to-collapse-law-and-order-550063/