21 11 2022
தமிழகத்தில் தினமும் சுமார் 4,500 நபர்கள் மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:
சமீபத்தில் மக்களிடையே பரவி வரும் மெட்ராஸ் ஐ-க்கு தீர்வு காண தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் முறையான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு 1.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தினந்தோறும் தமிழகத்தில் 4,500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் தங்களது குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தோற்று நோய் என்பதால், மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள்: கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்களில் இருந்து நீர் வருவது, கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி மேல் இமையும் கீழ் இமையும் ஒட்டிக் கொள்வது, வெளிச்சத்தை பார்த்தாலே கண் கூசுவது ஆகியவை ஆகும்.
சென்னையில் நாள்தோறும் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகிறார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/outbreak-of-madras-eye-in-tamil-nadu-minister-ma-subramanian-545372/