25 11 2022
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் முதல் குஜராத்துக்கு பலமுறை சென்று வந்தார். மேலும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் நவம்பரில் அவர் மேலும் அதிகமான வருகைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் அவர் ஏராளமான திட்டங்களை தொங்கி வைத்தார் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஏராளமான திட்டங்கள் அரசு நிகழ்ச்சிகளாகவே அறிவிக்கப்பட்டன. ஆனால் பிரதமரின் உரைகளின் உள்ளடக்கங்கள் குறித்து ‘அதிகாரப்பூர்வ’ தகவல் எதுவும் இல்லை. அவரது அனைத்து உரைகளிலும் அது குஜராத்தாக இருந்தாலும் சரி, இந்தியாவின் பிற பகுதியாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி ஒரே ஒரு கருத்து தான் வலியுறுத்தப் பட்டது. நவீன, மறுமலர்ச்சி இந்தியாவின் வரலாறு 2014 இல் தொடங்கியது என்பது தான் கருத்தாக இருக்கிறது. அதே கருத்தின் படி நவீன, மறுமலர்ச்சி பெற்ற குஜராத்தின் வரலாறு 2001 இல் தொடங்கியது. அந்த அறிக்கைகளில் இந்தியாவுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் இந்த புதிருக்கு விடை காணும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
பிரதமரின் கருத்துப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழும் மாநிலம் குஜராத் தான். இன்னும் எதிர்காலத்தில் காலம் கனிந்தால் குஜராத் மாநிலத்தை உலகுக்கே முன்மாதிரி என்று கூறுவார். டிசம்பர் தொடக்கத்தில் பிரதமரின் கோரிக்கைக்கு குஜராத் மக்கள் வாக்களிப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக, உலக மக்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். இது அவர்களின் துரதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.
பொறாமை இல்லை
குஜராத் எப்படி முன்மாதிரி ஆனது என்று ஆராயலாம். உண்மையிலேயே சில தனித்துவமான அம்சங்களை நான் கவனித்தேன்:
தற்போது பாஜக அரசு ஆட்சியில் இருந்தாலும், 2016 முதல் மூன்று முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த மூவரில், 2016 முதல் 2021 வரை, மிக நீண்ட காலம் பணியாற்றியவர் திரு விஜய் ரூபானி. அவர் தன்னுடைய ஆட்சியின் சிறப்பால் ஏற்படுத்திய சாதனை காரணமாக அவரது அமைச்சரவை சகாக்களுடன் அகற்றப்பட்டார். நவீன, மறுமலர்ச்சி பெற்ற குஜராத்தின் வளர்ச்சிக்காக வகுக்கப் பட்ட யுக்திகளில் ஒன்றுதான் சுழலும் நாற்காலி முதல்வர்கள் திட்டம்.. கர்நாடகா மற்றும் உத்தரகாண்டிலும் இதற்கான முன்மாதிரிகள் உண்டு.
குஜராத் மாதிரியின் மாடலின் மற்றொரு அம்சம் ‘டபுள் எஞ்சின்’ அரசு. இரட்டை என்ஜின்கள் என்பது பிரதமரும், மாநில முதல்வரும் தான் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உங்கள் கணிப்பு தவறு. இங்கே இரட்டை என்ஜின் என்பது பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் தான். இந்த இரண்டு இரட்டை என்ஜின்களை சூடாக்காமல் குஜராத்தில் எதுவும் நடக்காது. பிற மாநிலங்களும் இதே யுக்தியை கையாண்டால் நாம் மாநில அரசுகளையே ஒழித்துக்கட்டி விடலாம். ஒரே இந்தியா, ஒரே அரசை’ உருவாக்கலாம்.
வீழ்ச்சியில் பெருமை
குஜராத் மாதிரியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் குறையும் அதன் பொருளாதாரம் மட்டுமல்ல. அதற்கு பொருத்தமாக வளர்ந்து கொண்டே போகும் குஜராத்தியர் பெருமையும் தான்.
நான்கு ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பின்வருமாறு:
2017-18: 10.7 சதவீதம், 2018-19: 8.9, 2019-20: 7.3 மற்றும் 2020-21: -1.9. 2017-18 ஆம் ஆண்டிலிருந்து அகில இந்திய ஜி.டி.பி.,யின் வளர்ச்சி விகிதம் சரிவில் இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு பதில் ஆம் என்பதே. இதற்கு காரணமே ஒட்டு மொத்த தேசமே குஜராத்தை பின்பற்றுவது தான். தொற்று நோய்க்கு பின், 2021-22 குஜராத்தின் ஜி.எஸ்.டி.பி.,யில் ஒரு வேகம் இருந்தால், அகில இந்திய ஜி.டி.பி.,யிலும் ஒரு வேகம் இருந்தது. குஜராத் நேற்று செய்ததை நாளை இந்தியா செய்யும்..
இனி இந்தியா கடைப்பிடிக்கப் போகும் இன்னொரு அம்சம் என்னவென்றால் எதற்காகவும் மன்னிப்பு கேட்க கூடாது. பதவி விலகுவதும் கூடாது என்பதுவும் தான். மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 53 குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு உயிர்ச் சேதம் நடந்த பின்பும் பிரதமர் ஊடகங்களை அழைத்து தனது கருத்தை பதிவு செய்ய வில்லை. மிகவும் முக்கியமான இந்த பாலத்தை பராமரிக்கவும் பழுது நீக்கவும் வெறும் ஒன்றே கால் பக்கமே ஒப்பந்தம் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. இந்த பாலத்தை பராமரிக்க டெண்டர் இல்லை. முன் தகுதிகள் இல்லை. போட்டி ஏலங்கள் இல்லை. நிபந்தனைகள் இல்லை. பாலத்திற்கு புதிய வண்ணப்பூச்சு மட்டுமே நடந்தது. அதற்கு பிறகும் பாலம் பயன் படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதா என்று யாரும் தகுதி சான்றிதழும் வழங்க வில்லை. இப்படி நடந்தும் பாலம் பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. என்ன பிரளயம் நடந்தாலும் யாரும் மன்னிப்பு கேட்கவோ, பதவி விலகவோ வேண்டியது இல்லை என்பதில் குஜராத் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. எதிர்காலத்தில், இந்தியாவும் இந்தக் கொள்கையை பின்பற்ற கூடும்.
பெருமை பெற்ற சிங்கங்களை போல அதாவது கிர் காடுகளில் வசிக்கும் சிங்கங்களை போல இருப்பது நல்லது. எண்ணிக்கையில் அது தான் இவர்களின் பெருமையாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை தான் பெருமையை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குஜராத் மாநிலத்தில் தொழில் துறையில் முதலீடு செய்வதற்காக ஒப்புக் கொள்ளப் பட்ட தொகையும், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையும் வித்தியாசப்படுகின்றன. இனி அதை பார்க்கலாம்.
இப்படி ஒப்புக் கொள்ளப் பட்ட தொகைக்கும் உண்மையில் பெறப்பட்ட தொகைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்தால் இந்தியாவின் பெருமை மேலும் பெரிதாகும்.
பெண் குழந்தைகளில் தொடங்கி, பெண்களை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு குஜராத் ஒரு மாதிரி. பாலின விகிதத்தை எடுத்துக் கொண்டால் 1000 சிறுவர்களுக்கு 919 சிறுமிகள் உள்ளனர். இது அகில இந்திய சராசரியான 943க்கு எதிராக உள்ளது. குஜாதாத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளனர், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LPF) 41.0 சதவீதமாக உள்ளது, பெண்களுக்கான LPF 23.4 சதவீதமாக உள்ளது. இதில் எஞ்சிய பெண்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கும் பட்சத்தில் 76 சதவீத மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
குஜராத் மாடல் இளைஞர்களை வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என தொல்லை படுத்த வில்லை. 20-24 வயதுடைய இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 12.49 சதவீதமாக உள்ளது. தேர்தலுக்கு வரை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாதிரி குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அக்கரை செலுத்த வில்லை. இது குறித்த சுகாதார புள்ளிவிவரங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி தெரிவிக்கின்றன.. குழந்தைகளில், 39 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 39.7 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர். இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நாட்டின் மொத்த மாநிலங்களில் குஜராத் 26 முதல் 29 வது இடத்தில் தான் உள்ளது.
இந்த நாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்ற ஆர்எஸ்எஸ் கட்டளையை குஜராத் மாடல் உண்மையாகப் பின்பற்றியது. இதன் விளைவாக, மாநிலத்தின் மக்கள் தொகையில் 9.67 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களும் இந்துக்கள் தான். எனவே, குஜராத் மாடலின் கீழ், 1995 முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை.
இது மாதிரியான குஜராத் மாதிரி மற்ற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் பின்பற்றத் தகுதியான மாதிரியாக மேடைகளில் பேசப் படுகின்றன. குஜராத் மாதிரிக்கு அளிக்கப்படும் வாக்கு பிற இடங்களிலும் நிறைவேற வழி வகுக்கும். ஆமென்.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-gujarat-elections-narendra-modi-546590/